திருவள்ளூர் அமோனியா கசிவு: 9 பேர் உயிரிழப்பு: தொழிற்சாலை உரிமையாளர் கைது
திருவள்ளூர் மாவட்டத்தின் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் தொழிற்சாலையின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழிற்சாலை உரிமையாளர் கைது
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அமைந்துள்ள கண்ணிகைபைர் பகுதியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் அண்ட் பால் சீஃபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட எதிர்பாராத அமோனியா கசிவு விபத்தில் சிக்கி 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
கிட்டத்தட்ட 74 பேர் வரை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் குறைந்தது 46 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் பலர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் வடமாநில தொழிலாளர்கள் என்றும், அவர்களுக்கு மூச்சுத் திணறல், தலைச்சுற்றல் மற்றும் வாந்தி ஆகிய பாதிப்புகளால் அவதிக்கு உள்ளாகி இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து விசாரிக்க ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் சாந்தாராம் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது.
மேலும் வாயு கசிவு தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்த 3 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட இறால் பண்ணை தொழிற்சாலையில் உரிமையாளர் மோகன், ஜோசப் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், கன்னிகைபேர் கிராமத்தில் தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவினால் ஏற்பட்ட விபத்து - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு pic.twitter.com/ogUDVLs97e
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 21, 2026
முதலமைச்சர் விஜய் இரங்கல்
இந்நிலையில் திருவள்ளூர் கடல் உணவு தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து இருப்பதோடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் நிதியுதவியையும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |