இது தமிழ்மொழியை அவமதிக்கும் செயல்.., ஆளுநருக்கு கமல் ஹாசன் கண்டனம்
திராவிடம் என்ற சொல்லை தவிர்த்து பாடப்பட்ட தமிழ்த்தாய் விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு கமல் ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்தி தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடு’ என்ற வரியை பாடாமல் தவிர்க்கப்பட்டது.
இதற்கு தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சி மன்னிப்பு கோரியது.
மேலும், இந்த சம்பவத்திற்கும் ஆளுநருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கமும் அளித்துள்ளது.
கமல் ஹாசன் கண்டனம்
இந்த விவகாரத்திற்கு நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "திராவிடம் நாடு தழுவியது. தமிழ்த் தாய் வாழ்த்தில் மட்டுமல்ல, தேசிய கீதத்திலும் திராவிடம் இடம் பெற்றிருக்கிறது.
அரசியல் செய்வதாக நினைத்து “திராவிட நல்திருநாடு” எனும் வார்த்தைகளை விட்டுவிட்டுப் பாடியது தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும், தமிழக அரசின் சட்டத்தையும், இந்தியாவின் பெருமையாக விளங்கும் உலகின் தொன்மையான தமிழ்மொழியையும் அவமதிக்கும் செயல்.
நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்! எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |