73 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் செயற்கைமழை பொழிய வைத்த இந்தியர்
வளர்ந்த நாடுகளே செயற்கை மழை தொழில்நுட்பத்தில் ஆரம்ப கட்டத்தில் உள்ள நிலையில், இந்தியர் ஒருவர் 1952 ஆம் ஆண்டே செயற்கைமழை பொழிய வைத்துள்ளார்.
டெல்லி செயற்கை மழை
இந்திய தலைநகர் டெல்லியில் காற்று மாசடைவது ஓவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. காற்று மாசுவை குறைக்க, செயற்கை மழை பொழிய வைக்க டெல்லி மாநில அரசு திட்டமிட்டது.

இதன் ஒரு பகுதியாக ரூ.1.20 கோடி செலவில், டெல்லியின் புராரி, விஹார், கரோல் உள்ளிட்ட இடங்களில் மேகங்கள் மீது ரசாயனங்கள் தெளிக்கப்பட்டன.
ஆனால், ஈரப்பதம் குறைவாக இருந்ததால், செயற்கை மழை சாத்தியப்படவில்லை, அதே சமயம், மேக விதைப்பு மூலம், காற்று மாசு 6 முதல் 10 விழுக்காடு வரை குறைந்ததாக கான்பூர் ஐஐடி இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், 1952 ஆம் ஆண்டிலே இந்தியர் ஒருவர் வெற்றிகரமாக செயற்கை மழையை பொழிய வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
1952 இல் செயற்கை மழை
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே செயற்கை மழை பொழிவில் ஆரம்பக்கட்டத்தில் உள்ள நிலையில், கொல்கத்தா விஞ்ஞானியும், இந்திய வானிலை ஆய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் ஜெனரலுமான டாக்டர் சுதான்ஷு குமார் பானர்ஜி(Sudhanshu Kumar Banerji), 1952 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

1950களின் முற்பகுதியில் அமெரிக்கா சென்ற இவர், அங்கு செயற்கை மழை தொடர்பான ஆரம்பகால சோதனைகளை கவனித்து, இந்தியாவில் இதனை மிகவும் செலவு குறைந்ததாக மாற்ற முடியும் என்றும் நம்பினார்.
அதன் பின்னர், ஜாதவ்பூரில் தனது சொந்த மேக அறையை வடிவமைத்த அவர், அறையில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் சோதனைகளை நடத்திய பிறகு களத்திலும் தனது சோதனைகளை மேற்கொண்டார்.

ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூன்கள், விதைப்புப் பொருளை சிதறடிக்க வெள்ளி அயோடைடு நீராவி, உலர் பனி மற்றும் துப்பாக்கிப் பொடி ஆகியவற்றை பயன்படுத்தி ஜாதவ்பூரில் வெற்றிகரமாக செயற்கை மழையை பொழிய வைத்தார்.
சுதான்ஷு குமார் பானர்ஜி, இந்திய அறிவியல் வளர்ப்பு சங்கத்தில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சி.வி. ராமனின் முதல் ஆராய்ச்சி உதவியாளராகப் பணியாற்றினார்.
பின்னர், அவர் இந்திய வானிலை ஆய்வுத் துறையில் (IMD) சேர்ந்து,1944 ஆம் ஆண்டில் ஆய்வகங்களின் முதல் இந்திய இயக்குநர் ஜெனரலானார். இரண்டாம் உலகப் போரின் போது, உள்நாட்டு வானிலை ஆய்வு கருவிகளை உருவாக்கியுள்ளார்.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் உள்ள உலக வானிலை ஆய்வு அமைப்பில் (WMO) இந்தியா மற்றும் ஆசியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |