சீமானின் உண்மையான ஆண்டு வருமானம் இது தானாம்! வேட்புமனுவில் இருந்த பிழை: கண்டுபிடித்த இணையவாசிகள்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்திருந்த வேட்பு மனுதாக்கலில் அவரின் ஆண்டு வருமானம் குறித்த தகவலில் பிழை இருந்துள்ளதால், அவர் மீண்டும் வேட்பு மனுதாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், இதற்காக தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் இருக்கும் திருவொற்றியூரில் போட்டியிடுகிறார்.
இதையடுத்து இவர்நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவில் அவர் தன்னுடைய சொத்து விவரத்தை பதிவு செய்திருந்தார்.
அதில், தமக்கு உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு 31,06,500 ரூபாய் என்றும், அசையா சொத்துகள் ஏதுமில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
தன் மனைவிக்கு உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு .63,25,031 ரூபாய் என்றும் அசையா சொத்துகளின் மதிப்பு 25,30,000 ரூபாய் என்றும் சீமான் வேட்பு மனுவில் கூறியிருந்தார்.
அதுமட்டுமின்றி, தனக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் 65,500 ரூபாய் வருமானம் வந்துள்ளதாகவும், 2019-20ஆம் நிதியாண்டில் தமக்கு வந்த ஆண்டு வருமானம் 1000 ரூபாய் மட்டுமே என சீமான் வேட்புமனு உறுதிமொழி பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதைக் கண்ட இணையவாசிகள், என்னது ஆண்டு வருமானம் வெறும் 1000 ரூபாய் மட்டுமா என்று கேள்வி எழுப்பினர். மீம்ஸ் கிரியேட்டர்கள் இதை வைத்து மீம்ஸ் போட ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில், இதுபற்றி அறிந்த அக்கட்சியினர், சீமானின் ஆண்டு வருமான கணக்கு தவறுதலாக இடம்பெற்றதால், அவர் 2-வது முறையாக மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்வார் என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், சீமானின் ஆண்டு வருமானம் .2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய். ஆனால், ஆயிரம் ரூபாய் என தவறுதலாக குறிப்பிடப்பட்டுவிட்டது. அதை சரி செய்து மீண்டும் ஒரு வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளோம். இது ஒரு எழுத்து பிழை என்று கூறினார்.


