ஊழியர்களே இல்லாத ஒரு கடை: சுவிட்சர்லாந்தில் ஒரு சுவாரஸ்யம்
This Swiss shop has no staff, Honesty is the only thing keeping it running: சுவிட்சர்லாந்தில் ஊழியர்களே இல்லாத, மக்களுடைய நேர்மையை மட்டுமே நம்பி இயங்கும் கடை ஒன்று செயல்பட்டுவருகிறது.
சுவிட்சர்லாந்து தன் அழகாலும், அமைதியாலும் மக்களைக் கவர்ந்துவரும் ஒரு நாடு.
இந்நிலையில், சுவிஸ் கிராமம் ஒன்றில் ஊழியர்களே இல்லாத கடை ஒன்றைக் கண்டு வியந்துள்ள இந்தியர் ஒருவர் அது குறித்த செய்தி ஒன்றை சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் ஒரு சுவாரஸ்யம்
சுவிட்சர்லாந்திலுள்ள Gimmelwald என்னும் கிராமத்தில் கடை ஒன்று உள்ளது. அதன் பெயர் நேர்மைக் கடை!
இந்தக் கடையில் பணம் வாங்க காசாளர்களோ, அல்லது வாடிக்கையாளர்கள் என்ன செய்கிறார்கள் என கண்காணிக்க பாதுகாவலர்களோ இல்லை.
பொருட்கள் விலை குறிப்பிடப்பட்டு அழகாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக்கொண்டு, அதற்கான தொகையை வைத்துவிட்டுச் செல்லவேண்டும். அவ்வளவுதான்!

சமீபத்தில் சுவிட்சர்லாந்துக்குச் சென்ற இந்தியர் ஒருவர், இந்தக் கடையைக் கண்டு வியந்துள்ளதுடன், சுவிட்சர்லாந்தில் பல சுற்றுலாத்தலங்கள் உள்ளன, அவற்றைவிட இந்தக் கடை எனது மனதில் மறக்கமுடியாத ஒரு அனுபவமாக பதிந்துவிட்டது என்கிறார்.
இங்கிலாந்திலுள்ள கார்ன்வாலில், முன்னாட்களில் விவசாயிகள் தங்கள் பண்ணைகளில் விளைந்த காய்கறிகளையும் பழங்களையும் தங்கள் வீடுகளுக்கு முன் வைத்து, அருகில் பணம் போட ஒரு பெட்டியையும் வைத்துவிடுவார்களாம்.
மக்கள் தங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு, அதற்கான பணத்தை அந்த பெட்டிகளில் போடுவார்களாம்.
அந்த ஐடியாவைப் பின்பற்றித்தான் தான் இந்த நேர்மைக்கடையை நடத்திவருவதாகத் தெரிவிக்கிறார் கடையின் உரிமையாளரான டேவிட் வாட்டர்ஹவுஸ் என்பவர்.