TCS தந்த அதிர்ச்சி அடங்கும் முன்னர்... 50 சதவீத ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் ஒரு டாடா நிறுவனம்
டாடா குழுமத்தின் TCS நிறுவனம் 12,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி, அதன் அதிர்வலைகள் அடங்கும் முன்னர், இன்னொரு டாடா நிறுவனம் அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளது.
டாடா டிஜிட்டல்
ரத்தன் டாடாவின் மரணத்திற்கு பிறகு, டாடா குழும நிறுவனங்களில் இருந்து பல ஆயிரம் ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டு வருகிறார்கள்.

மென்பொருள் நிறுவனமான TCS முதலில் 1,000 ஊழியர்கள் என தொடங்கி, மொத்தமாக 12,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தற்போது டாடா குழுமத்தின் இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் நிறுவனமான டாடா டிஜிட்டல், அதன் சூப்பர்-செயலியான டாடா நியூவில் இருந்து ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருகிறது.
கசிந்துள்ள தகவலின் அடிப்படையில், டாடா நியூ நிறுவனம் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களைக் குறைக்க திட்டமிட்டுள்ளது. இந்த முடிவு நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி சஜித் சிவானந்தன் தலைமையில் மேற்கொள்ளப்படும் பெரிய மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி என்றே கூறப்படுகிறது.
டாடா நியூ மிகுந்த எதிர்பார்ப்புடன் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக, இந்த தளம் திறம்பட செயல்பட சிரமப்பட்டு வருகிறது.

நிறுவனம் தனது உத்தியை மீண்டும் மீண்டும் மாற்றியுள்ளதுடன் பல உயர்மட்ட நிர்வாகிகளையும் வெளியேற்றியது. புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சஜித் சிவானந்தன் பொறுப்பேற்றதும், டாடா நியூ இனி விற்பனையை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
வருவாயை அதிகரிப்பது
நிறுவனம் இனி லாபத்தில் மட்டுமே கவனம் செலுத்தும், அதாவது வருவாயை அதிகரிப்பது மற்றும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.
எகனாமிக் டைம்ஸ் நாளேடு வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், டாடா டிஜிட்டல் குழுவின் கீழ் உள்ள பிக்பாஸ்கெட் மற்றும் குரோமா இரண்டும் பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

மட்டுமின்றி, எதிர்காலத்தில் டாடா டிஜிட்டல் மூன்று முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்தும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நிதி சேவைகள், சந்தைப்படுத்தல் சேவைகள் மற்றும் ஒருங்கிணைந்த விசுவாசம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.
டாடா டிஜிட்டலின் வருவாய் 2025 நிதியாண்டில் 13.8 சதவீதம் குறைந்து ரூ.32,188 கோடியாக உள்ளது. இருப்பினும் நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.1,201 கோடியிலிருந்து ரூ.828 கோடியாகக் குறைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |