சுவிட்சர்லாந்தில் தொடர்ந்து இந்த வாரமும் ஏறுமுகத்தில் கொரோனா தொற்று: மருத்துவமனைகளுக்கு அதிகரிக்கும் அழுத்தம்
சுவிட்சர்லாந்தில் இந்த வாரமும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்த வண்ணமாகவே உள்ளது.
சுவிட்சர்லாந்தில், இந்த வாரம் புதிதாக 14,811 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள். இது கடந்த வாரத்தை ஒப்பிடும்போது 22 சதவிகிதம் அதிகமாகும்.
சுவிஸ் சுகாதார நிபுணர்கள் பலர் தற்போது கொரோனாவின் நான்காவது அலை உருவாகியுள்ளதாக கூறியுள்ளார்கள். ஆனால், கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையிலும், தடுப்பூசியின் தாக்கத்தால், கொரோனாவால் பலியாவோர் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. இந்த வாரம் சுவிட்சர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆகும்.
இருந்தாலும், கவலையை உருவாக்கியுள்ள விடயம் என்னவென்றால், மீண்டும் மருத்துவமனைகளுக்கு அதிக அழுத்தம் ஏற்படுமே என்பதுதான். அதாவது, இன்னும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தடுப்பூசி பெற்றிருந்தால் இந்த விடயம் தவிர்க்கப்பட இயலும். ஏனென்றால், மருத்துவமனைகளில் கொரோனாவால் அனுமதிக்கப்படுவோரில் பலர் இன்னமும் தடுப்பூசி பெறாதவர்களே.
சராசரியாக ஒரு வாரத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது 70 ஆகும். இதுவே, கடந்த வாரம் 50ஆகத்தான் இருந்தது.
சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி செலுத்தும் வீதம் வெகுவாக குறைந்துள்ளது. இன்னமும் கடுமையாக டெல்டா கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் தடுப்பூசி பெற்றோரின் எண்ணிக்கை வெறும் 0.57 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது என்பது வருந்தத்தக்க விடயம்தான்.