இது மிகப்பெரிய வர்த்தகப் போராக இருக்கும்... கனடா விடுத்த எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்புக்கு வரவிருக்கும் டொனால்டு ட்ரம்ப் கனேடிய பொருட்கள் மீதான சுங்க வரிகளை அதிகரித்தால், அமெரிக்கர்கள் டிரம்ப் சுங்க வரியால் பாதிக்கப்படுவது உறுதி என கனேடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பதிலடி உறுதி
மட்டுமின்றி கனடாவுக்கு எதிரான எந்தவொரு வர்த்தகப் போருக்கும் கடுமையான பதிலடி உறுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார். திங்களன்று அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பொறுப்புக்கு வருகிறார்.
இந்த நிலையில் தனது பொருளாதார மற்றும் வெளிவிவகாரக் கொள்கைத் திட்டங்களின் ஒரு பகுதியாக, கனேடிய இறக்குமதிகள் மீது 25 சதவீத வரிகளை விதிக்க அவர் திட்டமிட்டுள்ளார். மட்டுமின்றி, மெக்சிகோ, சீனா மற்றும் பிற வர்த்தக கூட்டாளிகளையும் அவரது புதிய கொள்கை குறிவைத்துள்ளது.
இது பல தசாப்தங்களில் இல்லாத கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மிகப்பெரிய வர்த்தகப் போராக இருக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.
பரிசீலித்து வருகிறது
அமெரிக்கர்கள் கனடாவிற்கு எதிராக ஒரு வர்த்தகப் போரைத் தொடங்க உள்ளனர். நாம் அதிகபட்ச பதிலடியை அளிக்கத் தயாராக இருக்கிறோம் என்று வாஷிங்டனில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
மேலும், ட்ரம்ப் தனது அச்சுறுத்தலை நிறைவேற்றினால், கனடா நுகர்வோர் மற்றும் வேலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் தொடர்ச்சியான நடவடிக்கைகளைத் தயாரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு பொருட்கள், கழிப்பறைகள் மற்றும் சிங்க்குகள் போன்ற மட்பாண்டங்கள், கண்ணாடிப் பொருட்கள் மற்றும் ஆரஞ்சு சாறு உள்ளிட்ட பொருட்களுக்கு அதிக வரிகளை விதிக்க கனடா பரிசீலித்து வருகிறது என்றே தகவல் கசிந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |