பிரான்ஸில் ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டம்! புதிய பாதுகாப்பு சட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
புதிய பாதுகாப்பு சட்டத்தின் வரைவு சட்டத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் சனிக்கிழமை பிரான்சின் முக்கிய தெருக்களில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினரை கடமையில் படமாக்குவதும், அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதும் தண்டனைக்குரிய குற்றம் என்ற வகையில் புதிய பாதுகாப்பு சட்டத்தை பிரான்ஸ் அரசு விரைவில் அமுல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு சட்டம் தற்போது முன்மொழியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த புதிய சட்டத்தை எதிர்த்து பாரிஸ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் உள்ள தெருக்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறிய பின்னர் பாரிஸில் உள்ள ரெபுப்ளிக் சதுக்கத்தில் போராட்டக்காரர்களுக்கு எதிராக பொலிசார் தண்ணீர் பீரங்கியைப் பயன்படுத்தினர்.
பாதுகாப்பு மசோதாவை எதிர்ப்பதற்காக ஏராளமான மக்கள் திரண்டதை அடுத்து வரைவு மசோதாவை மீண்டும் எழுதுவதாக உறுதியளிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் 32,000-க்கும் அதிகமானோர் ஈடுபட்டனர் என்று நாட்டின் உள்விவகார அமைச்சகம் தெரிவைத்துள்ளது.
மேலும் ஊரடங்கு உத்தரவின் போது சரியான காரணமின்றி வெளியேறும் நபர்களுக்கு 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என்று பாரிஸ் பொலிசார் தெரிவித்தனர்.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், காவல்துறை அதிகாரிகள் கடமையில் செய்யும் குற்றங்களை படமாக்குவதற்கும், படங்களையும் வீடியோக்களையும் சமூக ஊடகங்களில் வெளியிடுவதலிருந்து மக்களைத் தடுக்கும்.
மேலும், மக்களை கண்காணிக்க ட்ரோன்கள் மற்றும் கேமராக்களைப் பயன்படுத்த பொலிஸை அனுமதிக்கும் என்பதால் இந்த மசோதாவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.
பொலிஸ் அதிகாரிகள் தாக்குதல்களின் இலக்காக மாறியுள்ளதாலும், அவர்களுக்கு எதிரான வன்முறைகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதாலும் முன்மொழியப்பட்ட சட்டம் தேவை என்றும், இந்த நடவடிக்கைகள் காவல்துறையை சிறப்பாக பாதுகாக்கும் என்றும் பிரெஞ்சு அரசாங்கம் கூறுகிறது.
இருப்பினும், முன்மொழியப்பட்ட சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று ஆர்வலர்கள் கோருகின்றனர்.