விராட் கோலியின் 9 மாத பெண் குழந்தைக்கு மிரட்டல்! முகமது ஷமிக்கு ஆதரவாக பேசியதால் விஷமிகள் அட்டூழியம்
இந்திய அணி வீரர் முகமது ஷமிக்கு ஆதரவாக கேப்டன் விராட் கோலி கருத்து பதிவிட்டிருந்த நிலையில் அவரது 9 மாத பெண் குழந்தைக்கு சமூக வலைதளத்தில் பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பாலியல் மிரட்டலுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கம் கேட்டு டெல்லி மகளிர் ஆணையம், டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானிடம் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியை அடுத்து வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டது.
இதையடுத்து முகமது ஷமிக்கு ஆதரவாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கருத்து வெளியிட்டார். அதில், மதத்தின் அடிப்படையில் ஒருவரை விமர்சிப்பது மிகவும் மோசமான செயல் என்று பதவிட்டிருந்தார்.
இந்நிலையில் ஷமிக்கு ஆதரவாக விராட் கோலி கருத்து பதிவிட்டிருந்த நிலையில் அவரது 9 மாத பெண் குழந்தைக்கு சமூக வலைதளத்தில் பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதற்கு பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவென்று விளக்கம் கேட்டு டெல்லி காவல்துறைக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
கோலியின் மகள் மீதான அச்சுறுத்தல்கள் குறுத்து நாம் வெட்கப்பட வேண்டும், இந்த அச்சுறுத்தல் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், யாரேனும் கைது செய்யப்பட்டுள்ளார்களா என விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.