புலம்பெயர் விவகாரம்... பிரித்தானியாவிற்கு ஒத்துழைக்க ஒப்புக்கொண்ட 3 நாடுகள்
விசாத் தடைகளை விதிப்பதாக பிரித்தானியா தரப்பில் அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, மூன்று ஆப்பிரிக்க நாடுகள் வெளிநாட்டுக் குற்றவாளிகளையும் சட்டவிரோதக் குடியேறிகளையும் திரும்பப் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன.
விளைவுகளைச் சந்திக்க
உள்விவகார செயலர் ஷபானா மஹ்மூத் விடுத்த அச்சுறுத்தலுக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, நமீபியாவும் அங்கோலாவும் அகதிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக ஒத்துழைக்க ஒப்புக்கொண்டன.

உள்விவகார செயலர் தற்போது காங்கோவிடமிருந்தும் ஒத்துழைப்பைப் பெற்றுள்ளார். இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அவர் பேசுகையில், வெளிநாட்டு அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களைத் திரும்பப் பெறுவதை ஏற்க மறுத்தால், அவர்கள் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதே எங்களது முடிவு என்றார்.
அங்கோலா, நமீபியா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள், நாடுகடத்தல் தொடர்பான ஒத்துழைப்பை மேம்படுத்தாவிட்டால், அந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்திவிடுவோம் என்று பிரித்தானிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
நவம்பர் மாதம் பிரித்தானியாவின் புகலிடக் கோரிக்கை அமைப்பில் செய்யப்படவிருக்கும் மாற்றங்களை குறிப்பிடுகையில், திருப்பி அனுப்பும் கொள்கைகளுக்கு ஒத்துழைக்கத் தவறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு விசா தடைகள் விதிக்கப்படும் என்று மஹ்மூத் எச்சரித்தார்.
எதிர்பார்க்க முடியாது
இந்த நிலையில் தற்போது அந்த மூன்று நாடுகளுடனான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, மஹ்மூத் கூறுகையில், சட்டவிரோத குடியேறிகளும் ஆபத்தான குற்றவாளிகளும் இனி அங்கோலா, நமீபியா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு வெளியேற்றப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றார்.
இந்த ஒத்துழைப்பின் காரணமாக, இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்படுவதற்கோ அல்லது நாடு கடத்தப்படுவதற்கோ தகுதி பெறக்கூடும் என்று அரசாங்கம் கூறுகிறது.

அத்துடன், நாடு கடத்தப்படும் அகதிகளைத் திரும்பப் பெறுவது தொடர்பாக பிரித்தானியாவுடன் ஒத்துழைக்க மறுக்கும் நாடுகள், சாதாரண விசா உறவை எதிர்பார்க்க முடியாது என்று உள்துறைச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்; ஒத்துழைப்பு இல்லாத பட்சத்தில் மேலும் பல அச்சுறுத்தல்கள் எதிர்பார்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, வங்கதேசம், சோமாலியா மற்றும் காபோன் ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன என்றும், அந்த நாடுகளுக்கு எதிராக அரசாங்கம் தடைகளை விதிக்கக்கூடும் என்றும் தெரிய வந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |