வசீகரமாக பேசி பணம் பெற்று வந்த கல்லூரி மாணவி! பிரபல மடாதிபதி தற்கொலை வழக்கில் பரபரப்பு வாக்குமூலம்
மடாதிபதி பசவலிங்க சுவாமியிடம் வசீகரமாக பேசி பணம் பெற்று வந்த கல்லூரி மாணவி
ஆபாச வீடியோவை வெளியிடாமல் இருக்க கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டப்பட்ட மடாதிபதி
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பிரபல மடாதிபதி பசவலிங்க சுவாமி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைதாகி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் மடாதிபதி பசவலிங்க சுவாமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான முதற்கட்ட விசாரணையில், ஹனிடிராப் முறையில் கும்பல் ஒன்று பணம் கேட்டு மிரட்டியதால் மடாதிபதி தற்கொலை செய்துகொண்டதாக தெரிய வந்தது.
இந்த நிலையில், பசவலிங்க சுவாமியை தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி மாணவி நீலாம்பிகா, கன்னூர் மடத்தின் மடாதிபதி மிருதனஞ்ஜெய சுவாமி, வழக்கறிஞர் மகாதேவய்யா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. சித்தகங்கா மடத்திற்கு அடிக்கடி சென்று வந்த நீலாம்பிகா, அங்கு பசவலிங்க சுவாமி வந்தபோது அவரிடம் அறிமுகமாகியுள்ளார்.
அப்போது அவரிடம் செல்போன் எண்ணை வாங்கிய மாணவி, அடிக்கடி அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தனக்கு பணப்பிரச்சனை இருப்பதாக கூறி 500, 1000 என பசவலிங்க சுவாமிடம் பெற்றுள்ளார்.
ஒரு கட்டத்தில் நெருங்கி பழகிய அம்மாணவி, வீடியோ அழைப்பில் பசவலிங்க சுவாமியை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார் அதனைக் காட்டி நீலாம்பிகா, மகாதேவய்யா ஆகியோர் வீடியோ வெளியிடாமல் இருக்க கோடிக்கணக்கில் பணம் தர வேண்டும் என்று பசவலிங்க சுவாமியை மிரட்டியுள்ளனர்.
இதற்கிடையில் வேறு சில மடாதிபதிகளிடம் நீலாம்பிகா இதேபோல் வீடியோ அழைப்பில் பேசியுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.