மூன்று சிறுமிகள் கூட்டாக மாயம்: லண்டனுக்கு தப்பியிருக்கலாம் என அச்சம்
கூட்டாக மயமான மூன்று இளம் வயது சிறுமிகள் தொடர்பில் தீவிரமாக தேடப்பட்டுவரும் நிலையில், மூவரும் லண்டனுக்கு தப்பியிருக்கலாம் என பொலிசார் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேற்கு சசெக்ஸில் உள்ள கிராலியில் இருந்து, 14 வயதான மில்லி-மே வூல்ட்ரிட்ஜ் வெள்ளியன்று இரவு காணாமல் போன நிலையில், நண்பர்களான லோலா(14), மற்றும் இசபெல்லா(16) ஆகியோரும் அவருடன் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
மில்லி-மே 5 அடி 3 அங்குலம் உயரம் கொண்டவர் என கூறும் பொலிசார், கருப்பு நிற தோள் பை ஒன்றையும் மில்லி-மே வைத்திருந்ததாக கூறுகின்றனர்.
மில்லி-மே, இசபெல்லா மற்றும் லோலா ஆகிய மூவரும் லண்டனில் இருப்பதாக நம்பப்படுகிறது. ஒருவேளை அவர்கள் க்ராய்டன் அல்லது ஸ்ட்ராட்டம் பகுதியில் காணப்பட வாய்ப்பிருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மட்டுமின்றி பிரைட்டன் மற்றும் க்ராலி பகுதிகளிலும் அவர்களுக்கு அறிமுகமானவர்கள் இருக்கலாம் என பொலிசார் நம்புகின்றனர்.
மாயமான மூவரின் நலன் கருதி தீவிரமாக தேடி வருவதாக சசெக்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.