வீட்டில் விசித்திரமாக அங்குமிங்கும் சுற்றி திரிந்த பூனை! பிரிட்ஜ் இடுக்கில் உரிமையாளர் கண்ட காட்சி
அவுஸ்திரேலியாவில் வீட்டு பிரிட்ஜ் மற்றும் பைகளுக்கு இடையே ’புலி பாம்பு’ மறைந்திருந்த நிலையில் பூனை கொடுத்த எச்சரிக்கை மணி மூலம் அதை உரிமையாளர் கண்டுபிடித்து உயிர் தப்பியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் dartmoor-ஐ சேர்ந்தவர் ரிக்கி ஓவன்ஸ். இவர் தான் இந்த திக் திக் நிமிடங்களை சந்தித்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன்னர் ரிக்கி வீட்டில் இருந்த கதவுக்குள் ஏதோ நுழைந்து செல்வது போல அவருக்கு தோன்றியது. ஆனால் அதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளாத நிலையில் வெளியில் மது விடுதிக்கு சென்றார்.
பின்னர் வீட்டுக்கு திரும்பிய போது அவரின் பூனையின் செயல்கள் வித்தியாசமாக இருப்பதை கண்டு குழம்பி போனார். அதாவது பூனையானது வீட்டிலிருந்த பிரிட்ஜ் மற்றும் அதன் அருகே வைக்கப்பட்டிருந்த பைகளை சுற்றி அங்குமிங்கும் ஓடியது.
இதை எச்சரிக்கை மணியாக எடுத்து கொண்ட ரிக்கி அந்த பைகளை லாவகமாக நகர்த்திய போது அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் அதன் இடுக்கில் புலி பாம்பு இருப்பதை கண்டார்.
இதையடுத்து கொம்பால் அதை தூக்கி வீட்டு பின்புறத்தில் உள்ள காட்டில் விட்டுள்ளார். ரிக்கி கூறுகையில், என்னுடைய பூனை எச்சரிக்கை மணி அடித்து சமிக்ஞை கொடுத்தது.
இந்த சம்பவத்தில் இருந்து முக்கியமான பாடத்தை கற்றுகொண்டேன். என்னுடைய இடத்தில் குழந்தை இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என நினைத்து பாருங்கள் என கூறியுள்ளார்.
இது குறித்து பாம்பு பிடிப்பதில் வல்லவரான மவுண்ட் கம்பீர் கூறுகையில், வீடுகளில் பாம்புகள் இருப்பது அசாதாரணமானது அல்ல, மேலும் மக்கள் தங்கள் கதவுகளைத் திறந்து வைக்க வேண்டாம் என கூறியுள்ளார்.