இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக டிம் சவுதி நியமனம்! வெளிவரும் தகவல்கள்
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக டிம் சவுதி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பந்துவீச்சு ஆலோசகராக டிம் சவுதி நியமனம்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதி, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கடந்த சீசனில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருந்தார்.
இருப்பினும், இந்த சீசனில் அவர் கவுண்டி போட்டிகளில் விளையாட இருப்பதால், அந்தப் பொறுப்பில் அவர் இருக்கமாட்டார்.
இதன் விளைவாக, 36 வயதான டிம் சவுதி இங்கிலாந்து அணியின் புதிய ஆலோசகராக நியமிக்கப்படக்கூடும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன.
டிம் சவுதி கடந்த டிசம்பர் மாதம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
அவர் சர்வதேச டெஸ்ட் அரங்கில் 391 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து எதிர்கொள்ள இருக்கும் போட்டிகள்
இங்கிலாந்து அணி இந்த கோடை கால சீசனை ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் தொடங்கவுள்ளது.
ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட இந்தத் தொடர் இந்த மாதத்தின் 22-ம் திகதி தொடங்குகிறது.
அதனைத் தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது.
இந்தத் தொடர் மே 29 முதல் ஜூன் 10 வரை நடைபெற உள்ளது. இதன் பின்னர், இந்திய அணிக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட முக்கியமான தொடரில் இங்கிலாந்து அணி மோதவுள்ளது. இந்தத் தொடர் ஜூன் 20-ம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |