423 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! விடைபெற்ற டிம் சௌதீ
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 423 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
658 ஓட்டங்கள் இலக்கு
ஹாமில்டனில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
நியூசிலாந்து அணி நிர்ணயித்த 658 ஓட்டங்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி , மூன்றாவது நாள் முடிவில் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இன்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தெல் மற்றும் ஜோ ரூட் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
பெத்தெல் 76
இந்த கூட்டணி 104 ஓட்டங்கள் குவித்த நிலையில் ஜோ ரூட் 54 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹாரி புரூக் 1 ரன்னில் ரூர்க்கே ஓவரில் ஆட்டமிழந்தார்.
பின்னர் அரைசதம் அடித்த ஜேக்கப் பெத்தெல் (Jacob Bethell) 76 ஓட்டங்களில் சௌதீ ஓவரில் அவுட் ஆனார்.
அதனைத் தொடர்ந்து சாண்ட்னர் ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய, இங்கிலாந்து அணி 234 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இமாலய வெற்றி
அதிரடியாக ஆடிய காஸ் அட்கின்சன் 41 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி 423 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. மிட்செல் சாண்ட்னர் 4 விக்கெட்டுகளும், ஹென்றி, சௌதீ தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
தனது கடைசி டெஸ்டில் விளையாடிய டிம் சௌதீ (Tim Southee) வெற்றியுடன் விடைபெற்றபோது, சக வீரர்களும், ரசிகர்களும் அவருக்கு பிரியாவிடை அளித்தனர்.
107 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சௌதீ 391 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதில் 15 முறை 5 விக்கெட்டுகளும், ஒருமுறை 10 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |