பட்டப்பகலில் இளம்பெண் படுகொலை: திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீரழிவு என சீமான் ஆவேசம்
தமிழக மாவட்டம், திருநெல்வேலியில் 18 வயது இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்திற்கு, திமுக ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு முற்றாகச் சீரழிந்துள்ளது என நாம் தமிழர் கட்சி சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இளம்பெண் படுகொலை
திருநெல்வேலி டவுன் கீழ ரத வீதியில் பேன்சி ஸ்டோரில் சந்தியா (18) என்ற பெண் வேலை பார்த்து வந்தார். இவர், தனது குடும்ப சூழ்நிலை காரணமாகவும், வறுமையின் காரணமாகவும் அங்கு வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், இளைஞர் ஒருவர் சந்தியாவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர், சந்தியாவிற்கு அடிக்கடி தொல்லை தந்துள்ளார். ஆனால், சந்தியா இளைஞரின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.
அப்போது, வழக்கம்போல் சந்தியா வேலைக்கு வந்து, குடோனுக்கு சென்று பொருள்களை எடுப்பதற்காக திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் வழியாக சென்றுள்ளார். அந்த சமயத்தில், சந்தியாவை துரத்திய இளைஞர் அரிவாளை வைத்து வெட்டி படுகொலை செய்துள்ளார். இச்சம்பவம், பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சீமான் ஆவேசம்
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சீமான் வெளியிட்ட அறிக்கையில், "திருநெல்வேலி அருகே உள்ள திருப்பணிகரிசல் குளம் கிராமத்தைச் சேர்ந்த சந்தியா, ஒரு தலைகாதல் காரணமாக அதே பகுதியில் பணிபுரிந்து வந்த இளைஞரால் படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது.
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக இளம்பெண்கள் பட்டப்பகலில் படுகொலை செய்யப்படுவது அதிகரித்துவருவது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முற்றாகச் சீரழிந்துள்ளது என்பதையே வெளிப்படுத்துகிறது.
சந்தியாவைக் கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளியை கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமெனவும், சந்தியாவின் குடும்பத்தினருக்கு துயர் துடைப்பு நிதியாக ஒரு கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்" எனவும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |