திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வாங்க முண்டியடித்த பக்தர்கள்.., தமிழக பெண் உள்பட 6 பேர் உயிரிழப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டோக்கன் வாங்கும்போது கடும் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழக பெண் உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6 பேர் உயிரிழப்பு
திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10-ம் திகதி முதல் 19-ம் திகதி வரை பக்தர்கள் அனைவருக்கும் சொர்க்கவாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக திருப்பதியில் 8 இடங்களில் 91 கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அங்கு இலவச தரிசன டோக்கன் பெறுவதற்காக ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முண்டியடித்ததாக சொல்லப்படுகிறது.
இதனால், அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஆறு பக்தர்கள் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர். மேலும், சில பக்தர்கள் காயமடைந்துள்ளனர். இதில், தமிழக மாவட்டமான சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும், உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடு இன்று திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்று ஆய்வை மேற்கொள்ள உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |