இளவரசர் ஹரி மேகனின் பட்டங்கள் பறிக்கப்படவேண்டும்... தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ள பிரித்தானியர்கள்
ரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி பிரித்தானியர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பத்திரிகையான Daily Mail நடத்திய ஆய்வு ஒன்றில் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
பெரும்பாலான பிரித்தானியர்கள், ஹரி மேகன் தம்பதி அந்த பேட்டி கொடுத்தது தவறு என தெரிவித்துள்ளார்கள். அவர்கள் மகாராணியாருக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாக கூறியுள்ள பிரித்தானியர்கள், அவர்களது பட்டங்கள் பறிக்கப்படவேண்டும் என்று கூறி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
திங்களன்று ஓபரா வின்ஃப்ரேயுடனான பேட்டி பிரித்தானியாவில் ஒளிபரப்பப்பட்டபின், Daily Mail பத்திரிகை ஆய்வு ஒன்றை நடத்தியது.
மகாராணியாரின் கணவரும் தங்கள் தாத்தாவுமான இளவரசர் பிலிப் இதய அறுவை சிகிச்சை முடித்து மருத்துவமனையில் இருக்கும் நேரத்தில், ஹரியும் மேகனும் இந்த பேட்டிக்கு ஒப்புக்கொண்டது தவறு என பிரித்தானியர்களில் பெரும்பான்மையோர் (54 சதவிகிதத்தினர்) கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இந்த பேட்டி என்ன விதமான உணர்வை ஏற்படுத்தியது என கேட்டபோது, 41 சதவிகிதத்தினர் ஏமாற்றத்தை அளித்தது என்றும், 25 சதவிகிதத்தினர் கோபத்தை ஏற்படுத்தியது என்றும் தெரிவித்துள்ளனர்.
இன்னொரு பக்கத்தில் பார்த்தால், மொத்தத்தில் மக்களுக்கு ராஜ குடும்பம் மீதான மதிப்பு குறைந்து வருவது போல தெரிகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் பாதிக்கும் மேலானோர், ஹரி மேகன் மீதான மதிப்பு குறைந்துபோனதாக தெரிவித்துள்ளார்கள்.
மகாராணியார் மீதான மதிப்பு மட்டும் இன்னும் நேர்மறையாக இருக்கிறது. அவருக்கு ஆதரவாக 64 சதவிகிதத்தினர் வாக்களித்துள்ளார்கள். என்றாலும் கடந்த ஆண்டைவிட இது 2 சதவிகிதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரியின் மதிப்பு 15 புள்ளிகள் குறைந்துள்ளது, இளவரசர் சார்லஸின் மதிப்பு 13 புள்ளிகள் குறைந்துள்ளது, மேகனின் மதிப்பு 6 புள்ளிகள் குறைந்துள்ளது.
மகாராணியாரோ, ஏன் பிரித்தானியாவோ மேகனை இன ரீதியாக மோசமாக நடத்தியதா என்றால், மக்கள் அதை நம்பவில்லை. 41 சதவிகிதத்தினர் தாங்கள் அப்படி ஒரு விடயம் இருப்பதாக நம்பவில்லை என்று கூறியுள்ளார்கள்.
அதே நேரத்தில், 34 சதவிகிதம் பேர் மேகன் இன ரீதியாக மோசமாக நடத்தப்பட்டதை நம்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் கருத்துக்களில், வயதுக்கு ஏற்றாற்போல் வித்தியாசம் இருப்பதையும் உணர முடிகிறது.
முதியவர்களைப் பொருத்தவரை, 39 சதவிகிதத்தினர், ஹரியும் மேகனும் உண்மையைக் கூறவில்லை என கருதுகிறார்கள். ஆனால், இளைஞர்களிலோ, அவர்கள் உண்மையைக் கூறுவதாக 59 சதவிகிதம்பேர் நம்புகிறார்கள்! 45 மற்றும் அதற்கு அதிக வயதுள்ளவர்களில் 50 சதவிகிதத்தினர் மகாராணியார் மற்றும் ராஜ குடும்பத்தை நம்பலாம் என்று தெரிவித்துள்ளார்கள்.
இந்த ஆய்வில் எல்லாவற்றையும் விட கவனிக்கத்தக்க விடயம் என்னவென்றால், இளைஞர்களானாலும் சரி, முதியவர்களானாலும் சரி, அனைத்து தரப்பு பிரித்தானியர்களுமே, மகாராணியார் தரப்பும், ஹரி மேகன் தரப்பும் குறை கூறுவதை நிறுத்திக்கொண்டு சண்டை போடுவதை நிறுத்தவேண்டும் என்றே விரும்புகிறார்கள் என்பதுதான்.

