மலையகத் தமிழர் விழாவில் தமிழக முதல்வரின் காணொலிக்கு தடை: இந்திய அரசுக்கு எதிராக வலுக்கும் கண்டனம்
இலங்கை மலையகத் தமிழர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி உரையை ஒளிபரப்ப தடை விதித்துள்ள இந்திய அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் காணொலிக்கு தடை
இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் இலங்கைக்குச் சென்று 200 ஆண்டுகள் ஆனதை நினைவுபடுத்தும் வகையிலும், அவர்கள் இலங்கைக்கு அளித்த சேவையையும் பொருளாதார பங்களிப்பையும் பாராட்டி 'நாம் 200' என்ற தேசிய நிகழ்வு கடந்த 3 -ம் திகதி நடைபெற்றது.
இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமானால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி உரையை ஒளிபரப்ப இந்திய அரசு தடை விதித்துள்ளதாக நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
வைகோ எதிர்ப்பு
இதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், " தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாடு என்றும் குரல் கொடுக்கும் என்று மலையக தமிழர்களுக்கு ஆதாரவாக முதல்வர் ஸ்டாலின் உரையில் குறிப்பிட்டிருந்தார்.
முதல்வரின் உரை ஊடகங்கள் மற்றும் ஏடுகளுக்கும் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால் நவம்பர் 3 ஆம் தேதி கொழும்பில் நடைபெற்ற மேற்கண்ட விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி உரையை ஒளிபரப்ப கூடாது என்று மத்திய பாஜக அரசு தடை போட்டு விட்டது என இன்று வெளியான இந்து ஆங்கில நாளேடு (06.11.2023) விரிவாக செய்தி வெளியிட்டு இருக்கிறது.
இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் இந்திய அரசின் சார்பில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். தமிழ்நாடு பாஜக தலைவரும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வாழ்த்துரை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய காணொலி உரையை அந்த விழாவில் ஒளிபரப்ப தடை விதித்ததன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சிறுமைப்படுத்துவதற்கு முயன்றுள்ள மத்திய பாஜக அரசின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது கடும் கண்டனத்துக்குரியது" எனத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |