மனிதம் மரத்துப்போய்விட்டதா? ஐக்கிய, உலக நாடுகள் சேர்ந்து போரை நிறுத்த வேண்டும்! தமிழக முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்த உலக நாடுகள் ஓரணியாக நின்று செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நீடிக்கும் போர்
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் 3,300 பேர் பலியாகியுள்ளதாகவும், 13,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் காசாவில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500 பேர் பலியானது சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இச்சம்பவத்திற்கு கண்டனங்களையும், வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போரை நிறுத்த உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
IBRAHEEM ABU MUSTAFA
தமிழக முதல்வர் வலியுறுத்தல்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'போர் என்பதே கொடூரமானது! அது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப்பட்டாலும், அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள்தான். கடந்த பத்து நாட்களாக காசா பகுதியில் நிகழும் போர், உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.
உயிருக்குப் பயந்து இலட்சக்கணக்கான மக்கள் வெளியேறுவதும், மொத்தமாக அழிக்கப்பட்ட குடியிருப்புகளும், கடும் காயமடைந்த குழந்தைகளின் அழுகுரலும், குடிநீர் - உணவின்றி தவிப்போரின் வேதனையும் இதயமுள்ளோர் அனைவரையும் கலங்க வைத்துள்ளன.
போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்படுதல் கூடாது என்பதையும் மீறி மருத்துவமனை தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர் மரணம் அடைந்துள்ளார்கள்.
மனிதம் மரத்துப் போய்விட்டதா? உலக சமுதாயம் இனியும் இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கக்கூடாது. ஐக்கிய நாடுகள் அவையும், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இக்கோடும் போரை நிறுத்த வேண்டும். அப்பாவி பொதுமக்களின் உயிர்களைக் காக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |