குடியரசு நாளையொட்டி, ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் தமிழக அரசு
குடியரசு நாளையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தேநீர் விருந்தை புறக்கணிக்கும் தமிழக அரசு
குடியரசு மற்றும் சுதந்திர நாள் கொண்டாட்டத்தின்போது ஆளுநர் மாளிகையில், அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.
அதன்படி, ஜனவரி 26ஆம் திகதி குடியரசு நாளை முன்னிட்டு, ஆளுங்கட்சி உள்பட அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் தேநீர் விருந்து அளிக்கவிருக்கிறார். அதற்கான அழைப்புகளும் விடுக்கப்பட்டது.
ஆனால் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஆளும் திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்துவிட்டன.
ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளன.
அதே போல, மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக அங்கு நடைபெற உள்ள நன்றி தெரிவிக்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை பங்கேற்கிறார்.
இதன் காரணமாக தேநீர் விருந்தில் முதல்வரும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், தற்போது, ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என். ரவி செயல்படுவதைக் கண்டித்து தேநீர் விருந்து புறக்கணிக்கப்படுவதாகவும் குடியரசு நாளை முன்னிட்டு, ஆளுநர் மாளிகையில் அளிக்கப்படும் தேநீர் விருந்தில் தமிழக அரசின் சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |