காது வலியால் துடித்த பிளஸ்-1 மாணவி: மருத்துவர்கள் தவறான சிகிச்சையால் பறிபோன இளம் உயிர்
தொடர் காது வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிளஸ்-1 மாணவி அபிநயா, மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்து விட்டதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிளஸ்-1 மாணவி உயிரிழப்பு
திருவொற்றியூரை சேர்ந்த நந்தினி என்பவரின் மகள் அபிநயா, சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்துள்ளார்.
இவர் சில நாட்களாக தொடர் காது வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் அபிநயாவை தாய் நந்தினி அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அபிநயாவை பரிசோதித்த மருத்துவர்கள், கடந்த 14ம் திகதி அபிநயாவுக்கு காதில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் அறுவை சிகிச்சை முடிந்த அரை மணி நேரத்தில் அபிநயாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது, இதையடுத்து அபிநயாவுக்கு மூச்சு திணறல் அதிகமாக இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் உடனடியாக அபிநயாவை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அபிநயா, இறுதியில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
உறவினர்கள் போராட்டம்
இந்நிலையில் மாணவிக்கு தவறான சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர்களுக்கு எதிராக அபிநயாவின் தாய் மற்றும் உறவினர்கள் இணைந்து திருவொற்றியூர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அத்துடன் சம்பந்தப்பட்ட மருத்துவர்களை கைது செய்யுமாறும் கோஷங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவி அபிநயாவின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பிறகு தக்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் வாக்குறுதி அளித்த பிறகே சாலை மறியலை கைவிட்டு மாணவியின் உறவினர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.