தமிழகத்தில் தொடரும் நீட் தற்கொலைகள்! தேர்வுக்கு பயந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்!
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பயந்து மீண்டும் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் சேலம் மேட்டூர் அடுத்த கூழையூரைச் சேர்ந்த 19 வயதான தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
2 முறை தேர்ச்சி பெற முடியாத நிலையில் 3வது முறையாக நீட் தேர்வு எழுதவிருந்த நிலையில் இன்று காலை மாணவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
2017ல் குழுமூரைச் சேர்ந்த அனிதா, 2018ல் விழுப்புரம் மாவட்டம் - செஞ்சியை அடுத்த பெரவளூர் பிரதீபா, திருச்சியைச் சேர்ந்த சுபஸ்ரீ, சென்னை சேலையூரைச் சேர்ந்த ஏஞ்சலின் சுருதி.
2019ல் திருப்பூரைச் சேர்ந்த ரிதுஸ்ரீ, விழுப்புரத்தைச் சேர்ந்த மோனிசா, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி வைஸ்யா.
2020ல் கோவையைச் சேர்ந்த மாணவி சுபஸ்ரீ, அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ், மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா, 2021ல் தனுஷ் என தமிழகத்தில் நீட் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில், நாளை நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.