ஐந்து மாகாணங்களிலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை
ஐந்து மாகாணங்களிலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடக்கு ஆகிய ஐந்து மாகாணங்களிலும் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்றைய தினம் தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், இன்று தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க குறித்த ஐந்து மாகாண ஆளுநர்களும் தீர்மானித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று வழங்கப்பட்டுள்ள விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 13ம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, எதிர்வரும் 8ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தரம் 10, 11, 12 மற்றும் 13ஆம் ஆண்டு மாணவர்களுக்கு எதிர்வரும் 8ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா (Professor Kapila Perera) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலை ஊழியர்கள் சேவைக்கு அழைக்கப்பட வேண்டும் எனவும், இதற்கு மேலதிகமாக எதிர்வரும் 8ஆம் திகதி முதல் அனைத்து கல்வி நிர்வாகப் பிரிவினரும் சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.