பிரித்தானியாவில் வேண்டுமென்றே தடுத்து நிறுத்தப்பட்டனர்! வேதனையில் பேசிய சாதனை படைத்த பெண்
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் பர்மிங்ஹாமில் காமன்வெல்த் போட்டிகள் ஜூலை 28ம் திகதி தொடங்கி நடைபெறுகிறது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கச் சென்ற இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன், நேற்று டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார்.
பிரித்தானியாவில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் சென்றுள்ள பயிற்சியாளர் சந்தியா குருங் மற்றும் அவரது பயிற்சியாளர்கள் குழுவில் அவரது பயிற்சியாளர்களை நுழைய தடை விதித்து அங்குள்ள அதிகாரிகள் தடுத்ததாக வீராங்கனை குற்றம் சாட்டினார்.
அவர் பல முறை கேட்டுக்கொண்டும், அவர்கள் சில காரணங்களை மேற்கோள் காட்டி பயிற்சியாளர்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதன் காரணமாக தன்னுடைய பயிற்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு பயிற்சியாளர் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பி விட்டார் எனவும், இதனால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
AFP
இதை அடுத்து மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் இவ்விவகாரத்தில் தலையிட்டு, வீராங்கனையின் பயிற்சியாளருக்கு உரிய அனுமதி கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் அறிவுறுத்தியது. அதன்படி இன்று வீராங்கனையின் பயிற்சியாளருக்கு உள்ளே நுழைவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் லோவ்லினா கூறுகையில், நான் மிகவும் துன்புறுத்தப்படுகிறேன் என்பதை மிகுந்த வேதனையுடன் சொல்ல வேண்டும். ஒலிம்பிக் பதக்கம் வெல்ல உதவிய எனது பயிற்சியாளர் வேண்டுமென்றே நீக்கப்பட்டார், இது எனது பயிற்சி செயல்முறையைத் தடுக்கிறது.
— Lovlina Borgohain (@LovlinaBorgohai) July 25, 2022
பயிற்சியாளர்களில் ஒருவர் சந்தியா குருங் ஜி - இவர் துரோணாச்சார்யா விருது பெற்றவர். ஆயிரம் முறை கைகளை கூப்பி கெஞ்சிய பின்னரே எனது இரு பயிற்சியாளர்களும் பயிற்சி முகாமில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனால் எனது பயிற்சியில் பல இடையூறுகளை சந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறேன். எனது பயிற்சியாளர் சந்தியா குருங் தற்போது காமன்வெல்த் விளையாட்டு கிராமத்திற்கு வெளியே இருக்கிறார், இதன் விளைவாக எனது பயிற்சி நிகழ்வுக்கு எட்டு நாட்களுக்கு முன்னதாக நிறுத்தப்பட்டது.
எனது இரண்டாவது பயிற்சியாளர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். எனது கோரிக்கைகளை மீறி இது நடந்தது, இதே காரணத்தால் கடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் எனது ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இந்த அரசியல் அழுத்தங்களை மீறி நாட்டிற்காக பதக்கங்களை வெல்ல முடியும் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.