கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே இளவரசர்கள் வில்லியம் ஹரிக்கு இடையில் பிரச்சினைதான்: ஹரியின் நண்பர்
கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே பிரித்தானிய இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக ஹரியின் நண்பரான பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ITV தொலைக்காட்சியின் செய்தி தயாரிப்பாளரான Tom Bradby என்பவர், முன்பெல்லாம் ராஜ குடும்பத்தினர் குறித்து தகவல்கள் கொடுப்பது வெளிப்படையான ஒன்றாக இருக்கும் என்றும், அப்போதெல்லாம் இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் எதற்கும் வாக்குவாதம் செய்வதில்லை என்றும், வாழ்க்கை எளிமையாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.
ஆனால், சகோதரர்களுக்கிடையிலான உறவில் மெல்ல விரிசல் விட்டு, இப்போது அது பெரிதாகி, கடந்த ஒன்றரையாண்டுகளாக அவர்கள் வாக்குவாதம் செய்துவருவதாக கூறுகிறார் அவர். இந்த Bradby யாரென்றால், ஒரு காலத்தில் இளவரசர்கள் வில்லியம், ஹரி இருவருக்குமே பொதுவான நண்பராக இருந்தவர்.
ஹரி ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து Bradby ஹரியை ஆதரித்ததால், வில்லியம் Bradbyயுடனான நட்பை முறித்துக்கொண்டார். ராஜ குடும்பத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கியவர் Bradby.
இளவரசர் வில்லியம் கேட் தம்பதியரின் நிச்சயதார்த்தம் தொடர்பான நிகழ்ச்சி முதல் சமீபத்தில் இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கு வரையிலான நிகழ்ச்சிகளை Bradbyதான் தொகுத்து வழங்கினார்.
இந்த Bradbyதான், பேட்டி ஒன்றின்போது, ஹரியின் மனைவி மேகனிடம் நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா என்று கேட்டபோது, என்னிடம் நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா என்று கேட்டவர்கள் அதிகம் இல்லை என ராஜ குடும்பத்தினரைக் குறித்து சூசகமாக மேகன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.