சரவெடி ஆட்டமாடிய டாம் கர்ரன், சாம் கர்ரன்: டி20 பிளாஸ்ட்டில் மிரட்டல் வெற்றி
டி20 பிளாஸ்ட் போட்டியில் சர்ரே அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லங்காஷிரே அணியை வீழ்த்தியது.
ஜேசன் ராய் விளாசல்
சர்ரே மற்றும் லங்காஷிரே அணிகளுக்கு இடையிலான டி20 பிளாஸ்ட் போட்டி கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.
முதலில் களமிறங்கிய சர்ரே அணியில் ஜேசன் ராய் 19 பந்துகளில் 45 ஓட்டங்களும், ஆடம் தாமஸ் 32 ஓட்டங்களும் விளாசினர்.
அடுத்து வந்த ஓலி போப் 31 ஓட்டங்களும், அணித்தலைவர் சாம் கர்ரன் 32 ஓட்டங்களும் எடுக்க, டென் லாரன்ஸ் (2) மற்றும் லாரி எவன்ஸ் (10) இருவரும் சொதப்பினர்.
டாம் கர்ரன் ருத்ரதாண்டவம்
எனினும், ருத்ரதாண்டவமாடிய டாம் கர்ரன் (Tom Curran) 20 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் சர்ரே அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ஓட்டங்கள் குவித்தது. சர் ஜேம்ஸ் ஆண்டர்சன், பால் கொஹ்லின், கிறிஸ் கிரீன் மற்றும் ஜேக் ப்ளாதர்விக் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய லங்காஷிரே அணி 49 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் என தடுமாறியது. எனினும் கிறிஸ் கிரீன் 35 ஓட்டங்களும், பால் கொஹ்லின் 37 ஓட்டங்களும் விளாச அணியின் ஸ்கோர் உயர்ந்தது.
ஆனாலும் லங்காஷிரே அணி 16.1 ஓவர்களில் 154 ஓட்டங்களுக்கு சுருண்டது. கடைசிவரை களத்தில் நின்ற ஜேக் ப்ளாதர்விக் 11 பந்துகளில் 19 ஓட்டங்கள் எடுத்தார்.
யூசெப் மஜித் 3 விக்கெட்டுகளும், ரீஸ் டாப்ளே மற்றும் ஜோர்டன் கிளார்க் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |