இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்ற தக்காளி பருப்பு.. இலகுவாக செய்வது எப்படி?
காலை மற்றும் மாலை உணவிற்கு பலரும் இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி செய்வது வழக்கம்.
எப்போதும் சட்னி, சாம்பார் என்றால் சாப்பிடுபவர்களுக்கு ஆசையாக சாப்பிட முடியாது. இதனால் தான் புதிது புதிதாக முயற்சிக்க வேண்டி இருக்கிறது.
அந்தவகையில் நீங்கள் தற்போது தக்காளி பருப்பு செய்து எப்படி சாப்பிடலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு - 1/2 கப்
- வெங்காயம் - 1 நறுக்கியது
- தக்காளி - 3 நறுக்கியது
- பச்சை மிளகாய் - 3 நறுக்கியது
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- கல்லுப்பு - 1 தேக்கரண்டி
- புளி தண்ணீர்
- தண்ணீர்
தாளிக்க
- நெய் - 3 மேசைக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- சிவப்பு மிளகாய் - 3
- பூண்டு - 5 பற்கள்
- பெருங்காயத்தூள்
- கறிவேப்பிலை
- உப்பு - 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி இலை
செய்முறை
1. பிரஷர் குக்கரில் ஊறவைத்த துவரம் பருப்பு சேர்க்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பழுத்த தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கல் உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.
2. இதனுடன் புளி தண்ணீர் சேர்த்து மீண்டும் கலக்கவும். வேக வைக்க தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும்.
3. குக்கரை மூடி, வெயிட் வைத்து 5 விசில் வரும் வரை சமைக்கவும். 5 விசில் வந்த பிறகு, அடுப்பை அணைத்து, அழுத்தம் வெளிவரும் வரை காத்திருக்கவும். குக்கரைத் திறந்து சமைத்த பருப்பை மசிக்கவும்.
4. மசித்த பருப்பை தனியாக வைக்கவும்.
5. ஒரு கடாயில் நெய், உளுத்தம் பருப்பு சேர்க்கவும். கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், பூண்டு பற்களை தோலுடன் சிறிது நசுக்கி வறுக்கவும்.
6. கடுகு பொரிய ஆரம்பித்தவுடன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். சமைத்த மற்றும் மசித்த பருப்பை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
7. தேவைப்பட்டால் உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் சமைக்கவும்.
8. நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து மீண்டும் கலந்து எடுத்தால், சுவையான தக்காளி பருப்பு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |