தங்கமா தக்காளியா..! இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தக்காளி திருட்டு: விவசாயி வேதனை
தக்காளி விலை கிலோ 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்து வரும் நிலையில், கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள பண்ணையில், அடையாளம் தெரியாத சிலர், 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தக்காளியை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
கோனி சோமனஹள்ளி கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவர் காலையில் தனது பண்ணைக்கு சென்று பார்த்தபோது, அறுவடை செய்து வைக்கப்பட்டிருந்த தக்காளி மூட்டைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து ஹளேபிடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மூட்டை மூட்டையாக தக்காளி திருட்டு - விவசாயி அதிர்ச்சி!
சோமசேகர் என்ற விவசாயி கடந்த மூன்று ஆண்டுகளாக தனது தோட்டத்தில் தக்காளி சாகுபடி செய்து வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புதன்கிழமை காலை சோமசேகர் மகன் தரணிக்கு திருட்டு போனது தெரிய வந்தது.
50-60 தக்காளி மூட்டைகளை திருடர்கள் திருடி எஞ்சியிருந்த பயிரையும் நாசம் செய்ததாக தரணி கூறினார்.
Reuters
வழக்குப் பதிவு
இதையடுத்து, சோமசேகரின் புகாரின் பேரில் பொலிஸார் விசாரணையை தொடங்கினர். இதுகுறித்து லபீடு காவல் ஆய்வாளர் சிவனா கவுடா பாட்டீல் கூறியதாவது, திருட்டு சம்பவம் குறித்த தகவல்கள் கிராம மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டு, குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்.
இந்திய தண்டனைச் சட்டம் 379-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
ANI
"அறுவடை செய்த தக்காளியில் பாதி திருடு போனது" என்று சோமசேகரின் மனைவி பர்வதம்மா கூறினார். 'எங்களுக்கு இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக கனமழை, பருவநிலை மாற்றம் மற்றும் நோய் தாக்குதலால் எதையும் அறுவடை செய்ய முடியாமல் இருந்தது", இப்போது தக்காளி அறுவடை செய்யப்பட்டபின் திருட்டுப்போன சம்பவம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த தக்காளி திருட்டு நடந்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் தக்காளி கிலோ 100-120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |