ஆரோக்கியத்திற்கான தலைசிறந்த டாப் 5 காலை உணவுகள்! இட்லி சாம்பாருக்கு கிடைத்த அங்கீகாரம்!
ஒரு சிறந்த நாளின் தொடக்கம் அதன் காலை உணவில் இருந்து தொடங்குகிறது.
நாள் முழுவதும் நம்மை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுவதில் காலை உணவின் பங்கு அளப்பரியது.
அப்படிப்பட்ட காலை உணவை ஆரோக்கியமானதாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் தேர்ந்தெடுப்பது என்பது நம்மில் பலருக்கு சிரமமாக தான் உள்ளது.
இந்நிலையில், ஹார்வர்ட், ஸ்டான்ஃபோர்ட் ஆகிய புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் சிறப்பு மருத்துவர் செளரப் சேத்தி, உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும் 5 சிறந்த காலை உணவின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
தலைசிறந்த 5 காலை உணவுகள்
பெர்ரி, சியா விதைகள் மற்றும் கிரேக் யோகார்ட் உள்ளடக்கிய உணவு
இவை உடலுக்கு சக்தியை வழங்குவதுடன் குடல் நுண்ணுயிரிகளின் சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது.
அத்துடன் இந்த உணவில் புரோபயாடிக்குகள், ஒமேகா-3 மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவு இருப்பது நமது உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
வாழைப்பழம்,ஆளி விதைகள் மற்றும் ஓட்ஸ் உணவு கலவை
இவை உடலின் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும், மலச்சிக்கல் ஆகியவற்றைத் தவிர்க்க உதவுகிறது.
இவற்றில் உள்ள புரோபயாடிக்குகள் மற்றும் அதிகப்படியான கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை பாதுகாக்கிறது.
மல்டிகிரைன் டோஸ்ட் மற்றும் காய்கறிகள் நிறைந்த ஆம்லெட்
அதிக புரதச் சத்து நிறைந்த இந்த காலை உணவு நாள் முழுவதற்குமான சக்தியை வழங்குகிறது.
இவற்றில் உள்ள வைட்டமின்கள் மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
இட்லி, தேங்காய் சட்னி மற்றும் சாம்பார்
நார்ச்சத்து மற்றும் தாவர புரதம் நிறைந்த உணவாக இருப்பதால் காலை நேரத்திற்கான முழுமையான உணவாக பார்க்கப்படுகிறது.
இவை குடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து, உடல் செல்களுக்கு தேவையான சக்தியை விரைவாக வழங்குகிறது.
மேலும் இவை குடலில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கிறது.
காய்கறிகள் மற்றும் வேர்க்கடலையுடன் கூடிய அவல்(போஹா)
தாவர புரதம் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்த இந்த எளிமையான காலை உணவு சுலபமாக செரிமானம் அடைந்து உடலுக்கு தேவையான சக்தியை சீக்கிரமாக வழங்குகிறது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த உணவு குடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |