ஆட்டம் காணும் ரிஷியின் பிரதமர் பதவி... ருவாண்டா திட்டம் காரணமாக வெடித்துள்ள உட்கட்சிப் பூசல்
புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம் தொடர்பில், பிரித்தானியாவில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளது.
புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம்
சட்டவிரோதமாக, சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைந்து புகலிடம் கோரும் புலம்பெயர்ந்தோரை, ருவாண்டா என்னும் ஆப்பிரிக்க நாட்டுக்கு நாடுகடத்தும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த மும்முரமாக பிரித்தானிய அரசு முயன்று வருகிறது.
ஆனால், உச்சநீதிமன்றம் அந்த திட்டம் சட்டவிரோதமானது என்று கூறிவிட்டதால், அதை நிறைவேற்றுவதில் சிக்கல் உருவானது. ஆனாலும், அதை சட்டமாக்கியே தீருவேன் என ஒற்றைக்காலில் நிற்கிறார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்.
அவர் சார்ந்த கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியினரில், பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் உள்துறைச் செயலர் சுவெல்லா உட்பட பலர், ருவாண்டா திட்டத்தை நிறைவேற்றுமாறு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்க, அதே கட்சியைச் சார்ந்த புலம்பெயர்தல் அமைச்சரான Robert Jenrick, இந்த திட்டம் வேலைக்காகாது என்று கூறி ராஜினாமா செய்துவிட, ரிஷி இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கிறார்.
ஆட்டம் காணும் ரிஷியின் பிரதமர் பதவி...
இந்நிலையில், வரும் செவ்வாய்க்கிழமை, ருவாண்டா திட்டம் தொடர்பான மசோதா மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு ஒன்று நடைபெற உள்ளது.
கன்சர்வேட்டிவ் கட்சியினரிலேயே ஒரு தரப்பினர் ருவாண்டா திட்டத்தின் கடுமை போதாது என்று கூற, மற்றொரு தரப்பினர், அதாவது எதிர்க்கும் தரப்பினர், அது சர்வதேச சட்டத்தை மீறுவதாக அமையக்கூடும் என கவலை தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில், ரிஷி பிரதமரானதை சகித்துக்கொள்ளமுடியாமல் மனம் புழுங்கிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டமும் கன்சர்வேட்டிவ் கட்சியில் உள்ளது.
அவர்களில் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள், புலம்பெயர்தல் அமைச்சரான Robert Jenrick ராஜினாமா செய்வதற்கு முன்பே, ரிஷி மீது நம்பிக்கை இல்லை என கடிதம் எழுதிவிட்டதாகவும், அப்படியே 53 பேர் கடிதங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில், ரிஷி, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவராகவும் பிரதமராகவும் பதவியில் நீடிக்கவேண்டுமா என நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளவேண்டிவரலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், ரிஷியோ, நாம் (ருவாண்டா திட்டம் மீதான) வாக்கெடுப்பில் வெற்றிபெறுவோம் என்கிறார். மக்களுக்காக போராடுவோம், நாம் மக்கள் பக்கம் நிற்கிறோம் என்பதை மக்களுக்குக் காட்டுவோம் என்கிறார் அவர்.
தங்களுக்குள்ளேயே பிரிவினை கொண்ட கட்சிகள் வெற்றி பெறுவதில்லை என்று கூறியுள்ள ரிஷி, நாம் போட்டியிடவேண்டியது எதிர்க்கட்சிகளுடன்தானேயொழிய, நமக்குள்ளேயே அல்ல என்றும் கூறியுள்ளார்.
Image: ANDY RAIN/EPA-EFE/REX/Shutterstock
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |