கனடாவில் உயிருடன் கொளுத்தப்பட்ட பெண் தொடர்பில் வெளிவரும் பகீர் தகவல்
கனடாவின் ரொறன்ரோவில் பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட விவகாரத்தில், குறித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
ரொறன்ரோ பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட சம்பவம், கடந்த மாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அதிகாரிகள் தரப்பில் வாடிக்கையான சம்பவம் என கூறப்படிருந்தது.
ஜூன் 17ம் திகதி பகல் சுமார் 12.30 மணியளவில் கிப்லிங் பேருந்து நிலையத்தில் குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது. இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில், திராவகம் ஒன்றை பெண் ஒருவர் மீது வீசிய நபர், திடீரென்று நெருப்பு வைத்து கொளுத்தினார் என குறிப்பிட்டுள்ளனர்.
20 வயது கடந்த அந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு, அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் குறிப்பிட்டிருந்தன.
தற்போது காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி குறித்த பெண் இறந்துள்ளதாக பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் படுகொலை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அதிகாரிகள் இந்த விவகாரத்தை முன்னெடுக்க உள்ளனர்.
இந்த வழக்கில் 33 வயதான ரொறன்ரோ குடியிருப்பாளர் அடையாளம் காணப்பட்டு, கொலை முயற்சி, பெண்கள் மீதான தாக்குதல், ஆயுதங்களை பயன்படுத்தியது உளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்திருந்தனர்.
வெறுப்புணர்வால் உந்தப்பட்டு முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் என்றே அப்போது பொலிசார் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த தாக்குதல் தனியான சம்பவம் எனவும், பாதிக்கப்பட்ட மற்றும் சந்தேக நபர் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.