கனேடிய விமான நிலையத்தில் கொள்ளை போன தங்கக் குவியல்: இந்தியர் ஒருவர் கைது
கடந்த ஆண்டு ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் அடிப்படையில்
குறித்த கொள்ளையில் ஈடுபட்டிருந்த முன்னாள் ஏர் கனடா ஊழியர் ஒருவர் தற்போதும் விசாரணை அதிகாரிகளை திணறடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை வெளியான தகவலில்,
பிராம்டன் பகுதியில் குடியிருக்கும் 36 வயதான Archit Grover என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபர் இந்தியாவில் இருந்து ரொறன்ரோவுக்கு பயணப்பட்ட நிலையிலேயே விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது 5,000 டொலருக்கும் அதிகமான தொகையை திருடியது உள்லிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. அத்துடன் துப்பாக்கி தொடர்பான வழக்குகளும் அவர் மீது பதியப்பட்டுள்ளது.
பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் பீல் பிராந்திய பொலிசார் 10 பேர்களை இதுவரை அடையாளம் கண்டுள்ளனர் அல்லது குற்றஞ்சாட்டியுள்ளனர்.
6,600 தங்கக் கட்டிகள்
இவர்கள் மீது 21 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. கனேடிய வரலாற்றிலேயே மிகப் பெரிய கொள்ளையாக கருதப்படும் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தங்க வேட்டை தொடர்பில் கடந்த மாதம் பதியப்பட்ட வழக்குகள் குறித்து பொலிசார் அறிவிப்பை வெளியிட்டனர்.
2023 ஏப்ரல் 17ம் திகதி ஏர் கனடா விமானம் ஒன்று, சுவிட்சர்லாந்தில் இருந்து புறப்பட்டு பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த விமானத்தில் 400 கிலோ எடை கொண்ட 6,600 தங்கக் கட்டிகள் எடுத்து வரப்பட்டது.
இதன் மதிப்பு 20 மில்லியன் டொலர் என கூறப்பட்டது. அத்துடன் 2.5 மில்லியன் கனேடிய டொலர் வெளிநாட்டுப் பணமும் இதனுடன் கொண்டுவரப்பட்டது. ஆனால் விமானம் தரையிறங்கிய சில மணி நேரத்தில், அந்த 6,600 தங்கக் கட்டிகளும் மாயமாகியுள்ளது.
சரக்கு வாகனம் ஒன்றில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து குழு ஒன்று அந்த தங்கக் கட்டிகளை மொத்தமாக அள்ளிக்கொண்டு மாயமாகியுள்ளது.
சம்பவத்தன்று விடிகாலை 3 மணிக்கு தங்கம் மாயமாகியுள்ளதாக ஏர் கனடா ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து பீல் பிராந்திய பொலிசார் விசாரணையை தொடங்கினர். அத்துடன் இந்தியர்கள் இருவர் உட்பட 4 சந்தேக நபர்கள் மீது நாடு தழுவிய கைதாணையை பிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |