தனிமையில் இருக்கும் பெண்கள் தான் இலக்கு! கனடாவில் பொலிசாருக்கு தண்ணி காட்டி வந்த நபர் சிக்கினார்
கனடாவில் தொடர்ச்சியாக தனியாக இருக்கும் பெண்களிடம் அத்துமீறிவிட்டு பொலிசாருக்கு தண்ணி காட்டி வந்த நபர் ஒருவழியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ரொறன்ரோவில் தான் இச்சம்பவங்கள் நடந்துள்ளது. அதன்படி கடந்தாண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி கிழக்கு Dundas தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை ஆண் ஒருவர் அணுகினார். பின்னர் அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அவர் அங்கிருந்து தப்பிவிட்டார்.
இதன்பின்னர் கடந்த மாதம் 30ஆம் திகதி எக்லிங்டன் அவென்யூவில் பெண்ணிடம் வழிகேட்ட ஆண் அவரிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார். இதற்கடுத்து கடந்த 2ஆம் திகதியும் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது.
மூன்று சம்பவங்களிலும் தொடர்புடைவர் ஒரே நபர் தான் என்பதை உறுதி செய்த பொலிசார் அவரை வலைவீசி தேடி வந்த நிலையில் நேற்று முன் தினம் கைது செய்துள்ளனர்.
அவர் பெயர் Feyham Baig (38) என தெரியவந்துள்ளது. அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Feyham Baig மூலம் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதும் பொலிசார் அது குறித்து தங்களிடம் தகவல் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.