கனடாவில் திடீரென மாரடைப்பு வந்து துடித்த இந்தியர்: சந்தித்த இரண்டு வகை மனிதர்கள்
கனடாவில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த இந்தியர் ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
அப்போது தான் சந்தித்த இரண்டு வகையான மனிதர்கள் குறித்து பேசியுள்ளார் அவர்.
மாரடைப்பு வந்து தவித்த இந்தியர்
ரொரன்றோவில் வாழும் ப்ரிஜேஷ் பட்டேல், சில வாரங்களுக்கு முன் உடற்பயிற்சிக்கூடம் ஒன்றில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்திருக்கிறார்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. வெளியே வந்து ஒரு பெஞ்சில் அமர்ந்த பட்டேலுக்கு மார்பில் இறுக்கமான உணர்வு அதிகரித்துக்கொண்டே சென்றதுடன், உடலெல்லாம் வியர்க்க ஆரம்பித்துள்ளது, அத்துடன் அவரது வலது கையும் மரத்துப்போகத் துவங்கவே, தனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளார் அவர்.
சந்தித்த இரண்டு வகை மனிதர்கள்
உடனடியாக அந்த வழியாகச் சென்றவர்களிடம் அவசர உதவியை அழைக்கமுடியுமா என கேட்டுள்ளார் பட்டேல்.
ஆனால், பலர் அவரைக் கடந்துசென்றும் ஒருவர் கூட அவருக்கு உதவ முன்வரவில்லையாம்.
கடைசியாக ஒரு மனிதர் பட்டேலுக்கு உதவ முன்வந்துள்ளார். ஆனால், அவரது மொபைலில் பேட்டரி தீர்ந்துவிட்டிருக்கிறது.
ஆகவே, ஓடோடிச் சென்று பொதுத் தொலைபேசி ஒன்றிலிருந்து அவசர உதவியை அழைத்தாராம் அவர்.
பின் பட்டேலின் அருகில் அமர்ந்த அவர், பயப்படாதீர்கள் பிரதர், சைரன் ஒலி கேட்கிறது, ஆம்புலன்ஸ் அருகில் வந்துவிட்டது என்று கூறியுள்ளார் அவர்.
அவசர உதவிக்குழுவினர் வந்து பட்டேலை ஆம்புலன்சில் ஏற்றும்போதுதான், தனக்கு உதவியவர் யார் என்பதை தான் கவனிக்கவில்லை என்பதை உணர்ந்துள்ளார் பட்டேல்.
அந்த நல்ல மனிதர், பட்டேல் அமர்ந்திருந்த பெஞ்சின் எதிரே இருந்த உணவகத்திலிருந்துதான் ஓடிவந்தார் என்பது நினைவுக்கு வந்ததும், அது குறித்து தன் நண்பர்களிடம் தெரிவித்து அவரைக் கண்டுபிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் பட்டேல்.
உணவகத்திலிருந்த கமெரா உதவியால் பட்டேலுக்கு உதவிய ஹீரோவின் புகைப்படம் கிடைக்க, அவர் யார் என்பதைக் கண்டறிவதற்காக பேஸ்புக்கில் அவரது புகைபடத்தை வெளியிட்டு தேடி வந்துள்ளார் பட்டேலின் சகோதரியான சேஜல்.
கடைசியாக அவரைக் கண்டுபிடித்து அவரை தொடர்புகொண்டு அவருக்கு நன்றி தெரிவிக்க முயன்றபோது, அந்த நல்ல மனிதர் தனது அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பவில்லையாம்.
நான் ஒரு மனிதனாக சாதாரண ஒரு உதவியைத்தான் செய்தேன். நான் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை, என் சாதாரண உதவிக்கு என்னை கௌரவித்து என்னை பெரிய ஆள் போல் காட்டவேண்டாம் என்று கூறிவிட்டாராம் அவர்.
அதே நேரத்தில் தனக்கு உதவி செய்யாமல் சென்றவர்கள் மீது தனக்கு கோபம் எதுவும் இல்லை என்கிறார் பட்டேல். என்றாலும், தனக்கு உதவிய நல்ல மனிதரைப்போல சாதாரண உதவி செய்யவாவது மக்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார் அவர்.
அவசரமாக ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில், சில நேரங்களில் கொஞ்சம் நேரம் எடுத்து யாருக்காவது உதவும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளலாமே என்று கூறும் பட்டேல், அவசர உதவியை அழைப்பதற்கு செலவு எதுவும் கிடையாதே என்றும் கூறுகிறார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |