கனடாவில் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு... ஆயுதங்களுடன் சிக்கிய தந்தையும் மகனும்
கனடாவின் ரொறன்ரோ பகுதியில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட தந்தையும் மகனும் ஆயுதங்களுடன் சிக்கியுள்ள நிலையில், அவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
தந்தையும் மகனும்
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு சார்பில் தொடர்புடைய தந்தையும் மகனும் ரொறன்ரோவில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக கனேடிய அதிகாரிகள் தரப்பு புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.
கைதான 62 வயது Ahmed Eldidi மற்றும் அவரது மகன் 26 வயது Mostafa Eldidi ஆகிய இருவரும் தீவிரமான, வன்முறைத் தாக்குதலைத் திட்டமிடுவதில் மேம்பட்ட நிலையில் இருந்தனர் என்றே அறிக்கை ஒன்றில் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
கனேடிய குடிமக்களான இருவரும் ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவுக்கு வெளியே ரிச்மண்ட் ஹில்லில் உள்ள ஹொட்டல் ஒன்றில் கைது செய்யப்பட்டனர்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவரும் தெரிந்தே கிரேட்டர் ரொறன்ரோ பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் என்றும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பொதுமக்களுக்கான அச்சுறுத்தல் விலகியுள்ளதாகவே பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இருவர் மீதும் தற்போது பயங்கரவாத குழுவில் செயல்பட்டது, படுகொலைக்கு திட்டமிட்டது, கோடரி மற்றும் வாள் உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கனடாவில் பெரும் அசம்பாவிதம்
கைதான இருவர் மீதான விசாரணை என்பது ஒரு மாதம் முன்னரே துவங்கப்பட்டதாகவும், அவர்கள் இருவரின் நடவடிக்கைகளை கண்காணித்து, ஞாயிறன்று கைது செய்துள்ளதாக கனேடிய அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
கைது நடவடிக்கையால் ரொறன்ரோவில் அல்லது கனடாவில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது,. மேலும் கைதான அந்த தந்தை 2015ல் ஒரு ஐ.எஸ் காணொளி ஒன்றில் முகம் காட்டியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
ஐ.எஸ் ஆதரவு நடவடிக்கைகளால் இதுவரை கைதாகி வழக்கில் சிக்கும் 3 டசினுக்கும் மேற்பட்ட கனேடியர்களில் தற்போது இந்த தந்தையும் மகனும் இணைந்துள்ளனர்.
இதில் 27 பேர்கள் ஆண்கள் என்றும் 6 பேர்கள் பெண்கள் எனவும் ஐவர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023க்கு பின்னர் 9 பேர்கள் கைதாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |