கார் ஓட்டும்போது சாரதிக்கு வலிப்பு வந்ததால் ஏற்பட்ட துயரம்... நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு
கார் ஓட்டும்போது சாரதிக்கு வலிப்பு வந்ததையடுத்து, அவரால் நன்கு உயிர்கள் பலியாகின.
பெயர் வெளியிடப்படாத அந்த 45 வயது நபர், ஜேர்மன் தலைநகர் பெர்லினில் கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது, அவருக்கு திடீரென வலிப்பு வந்துள்ளது.
அதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியதில், சாலையைக் கடப்பதற்கான சிக்னலுக்காக காத்திருந்த மூன்று வயது சிறுவன் ஒருவன், அவனது பாட்டியான 64 வயது பெண்மணி ஒருவர் மற்றும் தங்கள் 20 வயதுகளிலுள்ள ஸ்பெயின் மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்களான ஒரு தம்பதியர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் வியாழனன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கார் ஓட்டியவர் கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு சமீபத்தில்தான் மூளையில் அறுவை சிகிச்சை ஒன்று நடந்த நிலையில், அவர் கார் ஓட்டியிருக்கவே கூடாது என அரசு தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டனர்.
கார் ஓட்டி விபத்தை உருவாக்கி நான்கு பேரின் மரணத்துக்குக் காரணமாக இருந்த அந்த நபரோ, விபத்து நடப்பதற்கு பல மாதங்கள் முன்பு தனக்கு வலிப்பு வந்ததாகவும், அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகள் எடுத்துக்கொண்ட பிறகு மீண்டும் தனக்கு மீண்டும் வலிப்பு வராது என்று தான் நம்பியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால், அவரது வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஆனால், அவர் உடனடியாக சிறை செல்லவேண்டியதில்லை. மீண்டும் அவர் மீது குற்றச்சாட்டுகள் ஏதாவது பதிவு செய்யப்பட்டால் அவர் சிறையில் அடைக்கப்படுவார்.
இதற்கிடையில், அவர் கார் ஓட்டியபோது, அவருடன் காரில் பயணித்த அவரது மகளும் 67 வயதுடைய பெண்மணி ஒருவரும் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.