பிஞ்சு மகளை காப்பாற்ற ரயில் தண்டவாளத்தில் குதித்த தந்தை... பின்னர் நடந்த கோர சம்பவம்
அவுஸ்திரேலியாவில் பிஞ்சு குழந்தைகள் இருவருடன் ரயில் தண்டவாளத்தில் சிக்கிய தள்ளுவண்டியால், தந்தையுடன் இருவர் கொல்லப்பட்ட கோர சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பார்ப்பவர்களை நடுங்க வைத்துள்ளது
தொடர்புடைய விபத்தின் கமெரா காட்சிகள் தற்போது வெளியாகி, பார்ப்பவர்களை நடுங்க வைத்துள்ளது. தெற்கு சிட்னியின் Carlton ரயில் நிலையம் அருகாமையிலேயே ஞாயிறன்று குறித்த கோர விபத்து நடந்துள்ளது.
இந்தியர்களான ஆனந்த் மற்றும் பூனம் ரன்வால் தம்பதி சம்பவத்தின் போது தங்களின் 2 வயதேயான இரட்டைக் குழந்தைகளை தள்ளுவண்டியில் வைத்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் பல்பொருள் அங்காடிக்கு சென்ற மனைவிக்காக தமது பிள்ளைகள் இருவருடன் ரயில் நிலையத்தில் காத்திருந்துள்ளார் ஆனந்த். அதே வேளை அவர் தனது அலைபேசியிலும் கவனம் செலுத்தியுள்ளார்.
அப்போது திடீரென்று தள்ளுவண்டியின் கட்டுப்பாட்டை ஆனந்த் இழந்ததாக கூறப்படுகிறது. அது மெல்ல நகர்ந்து ரயில் தண்டவாளத்தில் சென்றுள்ளது. சற்றும் தாமதிக்காத ஆனந்த் தமது மகளை காக்கும் பொருட்டும் தண்டவாளத்தில் குதித்துள்ளார்.
ஆனால் துரதிஷ்டவசமாக கடந்து சென்ற ரயிலில் சிக்கி தந்தையும் மகளும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த கோர சம்பவத்தை சக பயணிகள் பலர் நேரில் பார்த்துள்ளனர். அத்துடன், தமது மகளை காப்பாற்றும் பொருட்டு, ஆனந்த் ரயில் தண்டவாளத்தில் குதித்ததையும் அவர்கள் அதிர்ச்சியுடன் கண்டு நின்றனர்.
இன்னொரு குழந்தை காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், பூனம் வேதனையில் அலறியுள்ளார். அந்த குழந்தை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, திங்களன்று சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாராலும் தேற்றமுடியவில்லை
இதனிடையே, இச்சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் தெரிவிக்கையில், காப்பாற்றப்பட்ட இன்னொரு குழந்தை லேசான காயங்களுடனே தப்பியுள்ளது என்றார். அந்த தாயாரின் அலறல் சத்தம் கேட்டு, தாம் அவருக்கு உதவும் பொருட்டு விரைந்ததாக குறிப்பிட்டுள்ள அந்தப் பெண்,
தண்டவாளத்தில் குதிக்க முயன்ற அவரை தாம் கட்டுப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த அவசர மருத்துவ உதவிக் குழுவினரை அணுகவே நொறுங்கிப் போன அந்த தாயார் அனுமதிக்கவில்லை என்றும், அவரை அப்போது யாராலும் தேற்றமுடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சில நொடிகளிலேயே மொத்தமும் நடந்து முடிந்துவிட்டது. ஆனந்த் மற்றும் இரட்டையர்களில் ஒரு குழந்தையும் ரயிலில் சிக்கி மரணமடைந்துள்ளனர். மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துள்ள நிலையில், ஆனந்த் மற்றும் பூனம் ரன்வால் தம்பதி 2023 அக்டோபர் மாதம் தங்களின் இரட்டையர்களான மகள்களுடன் சிட்னிக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
பொலிசார் முன்னெடுத்துள்ள முதற்கட்ட விசாரணையில், குழந்தைகளுடன் தள்ளுவண்டி வேகமாக தண்டவாளம் நோக்கி நகர காரணம் பலத்த காற்றாக இருக்கலாம் என்றும், சில நொடிகள் மட்டுமே ஆனந்தின் கட்டுப்பாட்டில் இருந்து அந்த தள்ளுவண்டி தவறியது என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |