ரயில் பாதைகளுக்கு நடுவில் திடீர் பள்ளம்... சுவிஸ் ரயில் பாதை ஒன்றில் சேவை பாதிப்பு
சுவிட்சர்லாந்தில், கடந்த செவ்வாயன்று, ஜெனீவாவுக்கும் லாசேனுக்கும் இடையிலான ரயில் பாதைக்கருகில் திடீரென இரண்டு இடங்களில் பள்ளம் ஏற்பட்டது.
அதனால், ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் ரயில் சேவை துவக்கப்பட்டுள்ளது. என்றாலும், ஒரு மணி நேரத்துக்கு ஆறு ரயில்களுக்கு பதிலாக நான்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுவதுமே இதே நிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், Morges மற்றும் Allamanக்கு இடையில் பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்சினை என்னவென்றால், ரயில் பாதை செல்லும் இடத்துக்குக் கீழே, 10 மீற்றர் ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
தனியார் நிறுவனம் ஒன்று, வெப்ப ஆற்றல் திட்டம் ஒன்றிற்காக, ஜெனீவா ஏரியிலிருந்து தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக சுரங்கம் அமைத்துவருவதால், ரயில் பாதைக்கு அருகிலுள்ள மண் சரிந்து விழுந்துள்ளது. அதை முற்றிலும் சரி செய்வதற்கான பணிகள் இன்னமும் இருப்பதாலேயே ரயில் சேவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.