துப்பட்டாவால் கழுத்து நெரிக்கப்பட்டு திருநங்கை கொலை., சென்னையில் பரபரப்பு சம்பவம்
சென்னை மாதவரம் அருகே கைகள் கட்டப்பட்டு, துப்பட்டாவால் கழுத்து நெரிக்கப்பட்டு நிலையில் திருநங்கை ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
எண்ணூர் ஆல் இந்தியா ரேடியோ நகர், சுனாமி குடியிருப்பு 111-வது தெருவைச் சேர்ந்தவர் சரவணன் என்ற சனா. 29 வயதான இவர் திருநங்கை ஆவார்.
மணலி-மாதவரம் நெடுஞ்சாலையில், மாத்தூர் 200 அடி சாலையில் தனியார் பெட்ரோல் நிலையம் ஒன்று உள்ளது. இந்தப் பெட்ரோல் நிலையம் அருகே லேத் பட்டறை ஒன்று உள்ளது.
இந்தப் பட்டறை அருகே நிறுத்தப்பட்டிருந்த லொறியை எடுக்க மணலியை சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் வந்தபோது, அதனருகே சனா கைகள் கட்டப்பட்டு, கழுத்தில் துப்பட்டாவால் இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த லொறி ஓட்டுநர், மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். திருநங்கை சைனாவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த பொலிஸார், திருநங்கையை கொன்றது யார்? பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு திருநங்கை கொலை செய்யப்பட்டாரா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும், சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே உள்ள கண்காணிப்பு கமெராக்களில் பதிவான காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.