Omicron கொரோனா அச்சுறுத்தல்: கனடா விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகள்
கனேடிய சுகாதாரத்துறை அதிகாரிகள், Omicron கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, 10 நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்கள்.
முதலில் ஏழு நாடுகள் அந்த பட்டியலில் இருந்த நிலையில், தற்போது நைஜீரியா, எகிப்து மற்றும் Malawi ஆகிய நாடுகளும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
நேற்றைய நிலவரப்படி, கடந்த 14 நாட்களில் இந்த நாடுகளுக்கு பயணித்த வெளிநாட்டவர்கள் கனடாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14 நாட்களில், மேற்கூறப்பட்ட நாடுகளுக்குச் சென்றிருந்த கனேடிய குடிமக்கள் மற்றும் நிரந்தர வாழிட உரிமம் கொண்டோர், கனடாவுக்குள் நுழைவதற்கு முன், பிசிஆர் முறையில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவு ஒன்றை சமர்ப்பிக்கவேண்டும். அவர்கள் கனடாவுக்குள் நுழைந்த பிறகும், மேலதிக பரிசோதனைகளுக்கும் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தப்படுவார்கள்.
மேலும், அமெரிக்காவிலிருந்து வருவோர் தவிர மற்ற அனைத்து விமானப்பயணிகளும், கனடாவுக்குள் நுழைந்ததும், விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்படுவார்கள். அவர்களது பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்படும் வரை, அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். இந்த பரிசோதனை, வழக்கமாக கனடா வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் செய்யப்படும் பிசிஆர் பரிசோதனை தவிர்த்து கூடுதலாக செய்யப்படும் பரிசோதனை ஆகும்.
இந்தக் கட்டுப்பாடுகள் கனேடிய குடிமக்கள் மற்றும் நிரந்தர வாழிட உரிமம் கொண்டவர்களுக்கும், அவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றிருந்தாலும் பொருந்தும்.
Omicron வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
நவம்பர் 26 அன்று, அதாவது, இந்த புதிய வகை திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின், தென்னாப்பிரிக்கா, Eswatini, Lesotho, Botswana, Zimbabwe, Mozambique மற்றும் Namibia ஆகிய நாடுகளுக்கு பயணித்த வெளிநாட்டவர்கள் கனடாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கனேடிய அரசு அறிவித்தது.
இந்த புதியவகை கொரோனா வைரஸ், மிகவும் அதிக அபாயத்தை ஏற்படுத்தக்கூடியது என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.