லாபத்தில் வந்த பணம்.., ஊழியர்களுக்கு பைக்குகள், தங்க நாணயங்கள் கொடுத்து அசத்திய டிராவல்ஸ் உரிமையாளர்
லாபத்தில் வந்த பங்கை வைத்து ஊழியர்களுக்கு பைக்குகள், தங்க நாணயங்கள் கொடுத்து டிராவல்ஸ் உரிமையாளர் அசத்தியுள்ளார்.
ஊழியர்களுக்கு பரிசு
தமிழக மாவட்டமான தூத்துக்குடி, சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பூச்சிகாடு பகுதியை சேர்ந்தவர் பட்டுராஜா. இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக தனியார் டிராவல்ஸ் ஒன்றை தொடங்கினார்.
திசையன்விளை மற்றும் சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு தினம்தோறும் பேருந்து சேவைகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று இவரது நிறுவனத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் டிக்கெட் புக்கிங் ஏஜெண்டுகள், ஓட்டுநர்கள், கிளீனர்கள், மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவின் போது சிறப்பாக பணியாற்றிய 3 பேருக்கு இருசக்கர வாகனங்களும், 10 கிராம், 8 கிராம், மற்றும் 6 கிராம் கொண்ட தங்க நாணயங்கள் தலா ஒருவருக்கு பட்டுராஜா வழங்கினார்.
மேலும், 100 நபர்களுக்கு 1500 ரூபாய் மதிப்புள்ள கிப்ட் பொருள்களையும் வழங்கினார். அதுமட்டுமல்லாமல், அனைவருக்கும் சுடச்சுட மட்டன் பிரியாணி, வஞ்சிரம் மீன், உள்ளிட்ட அசைவ விருந்து வழங்கினார்.
அடுத்த ஆண்டில் சிறப்பாக செயல்படும் நபருக்கு புதிய இன்னோவா கார் வழங்கப்படும் என்று நிறுவன உரிமையாளர் பட்டுராஜா கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |