கனடா செல்லும் சிலருக்கு மட்டும் தடுப்பூசி பெறாவிட்டாலும் பயணம் செய்ய அனுமதி: யாருக்கெல்லாம் அந்த விதிவிலக்கு?
நவம்பர் 30ஆம் திகதி முதல், 12 வயதுக்கு மேற்பட்ட யாரானாலும், கனடாவுக்கு, விமானத்திலோ, கப்பலிலோ, ரயிலிலோ பயணிக்கவேண்டுமானால், அவர்கள் தாங்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தைக் காட்டவேண்டும்.
ஆனால், சிலருக்கு மட்டும் இந்த விதியிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இம்மாதம், அதாவது பிப்ரவரி 28 வரை, கொரோனா தடுப்பூசி பெறாத வெளிநாட்டவர்கள் விமானத்தில் ஏறி கனடாவிலிருந்து வெளியேறலாம். சிலருக்கு, தடுப்பூசி பெறவில்லையென்றாலும், கனடாவுக்குள் நுழையவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
புதிதாக நிரந்தர வாழிட உரிமம் பெற்றவர்கள், கருணை அடிப்படையில் கனடாவுக்கு பயணிப்பவர்கள் ஆகியோருக்கு இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் பயணத்துக்கான பணம் இருந்தால் போதும், இந்த கனேடியர்கள் தடுப்பூசி பெறாவிட்டாலும் தனி விமானங்களில் பயணிக்கலாம். அவர்கள் விமான நிலையங்களில் தடை செய்யப்பட்ட இடங்களுக்குச் செல்லக்கூடாது அவ்வளவுதான்!
அத்துடன், வெளிநாடுகளிலிருந்து கனடா திரும்பும் கனேடியர்களுக்கும் இந்த விதிவிலக்கு பொருந்தும். அதாவது, தடுப்பூசி கட்டாயம் என்னும் விதி அமுலுக்கு வரும் முன் கனடாவை விட்டு வெளியேறிய தடுப்பூசி பெறாத கனேடியர்கள் அல்லது தனி விமானத்தில் வெளிநாடு சென்றவர்கள், பயணத்துக்கு முந்தைய கொரோனா பரிசோதனைக்கு உட்பட சம்மதிக்கும் நிலையில், அவர்கள் கனடா திரும்பலாம்.
கனேடிய குடிமக்கள், நிரந்தர வாழிட உரிமம் பெற்றவர்கள் மற்றும் இந்தியச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளவர்கள் அனைவருக்கும், அவர்கள் தடுப்பூசி பெற்றிருந்தாலும் சரி, பெறாவிட்டாலும் சரி, கனடாவுக்குள் நுழைய உரிமை உள்ளது என்கிறார் கனேடிய போக்குவரத்துத் துறை செய்தித்தொடர்பாளரான Sau Sau Liu.
அது ஒரு அடிப்படை மனித உரிமை என்கிறார் அரசியல் சாசன சட்ட நிபுணரான Kerri Froc.
அதே நேரத்தில், கனடாவுக்குள் வந்த கனேடியர்கள், நாட்டுக்குள் பயணிக்க, அதாவது கனடா விமான நிலையம் வந்து சேர்ந்த கனேடியர்கள், மற்றொரு நகரத்திலிருக்கும் தங்கள் வீட்டுக்குச் செல்ல, விமானத்திலோ, ரயிலிலோ பயணிக்க அனுமதி இல்லை!
அவர்கள் தனிப்பட்ட கார் போன்ற வாகனம் ஒன்றில்தான் பயணிக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.