கனடாவிலிருந்து வெளிநாட்டுப் பயணம் செய்யும் திட்டம் உள்ளதா? : உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி
கொரோனா தொடங்கியபோது தங்கள் வெளிநாட்டு ஆசைகளை மூட்டை கட்டி வைத்துவிட்ட கனேடியர்கள் பலர், தற்போது மீண்டும் பயணத்திட்டங்களைத் துவங்கியுள்ளார்கள்.
கனடாவிலுள்ள Flight Centre என்னும் ட்ராவல் ஏஜன்சி, மார்ச் மாதத்தில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, 700 சதவிகிதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆனால், இன்னமும் கொரோனா முற்றிலுமாக மறைந்துவிடாத நிலையில், வெளிநாடு சென்றுவிட்டு கனடா திரும்பும்போது கனேடியர்கள் பல கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளவேண்டி வரும் என்பதை நினைவில் கொள்வது நல்லது. குறிப்பாக, வெளிநாடு சென்றுவிட்டு கனடாவுக்குள் மீண்டும் திரும்பும்போது, அவர்கள் பிசிஆர் பரிசோதனை முடிவுகளை சமர்ப்பிக்கவேண்டியிருக்கும் என்பதுடன், கனடாவுக்குள் நுழைந்தபிறகும் மற்றொரு பிசிஆர் பரிசோதனைக்குட்படவேண்டிய நிலையும் ஏற்படலாம்.
அதுவும், Omicron வகை மரபணு மாற்ற கொரோனா வைரஸ் பரவல் வேறு உள்ளதால், அந்த நடைமுறை இன்னமும் சிக்கலானதாக மாறலாம்.
கனடாவுக்குள் நுழைவதற்கு முன் செய்யவேண்டிய கொரோனா பரிசோதனைக்கு முன்பதிவு செய்வதில் பிரச்சினை ஏற்படலாம்
வெளிநாடு சென்றுவிட்டு கனடா திரும்புவோர், கனடாவுக்கு புறப்படுவதற்கு 72 மணி நேரம் முன்பு செய்துகொண்ட பிசிஆர் பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதை காட்டவேண்டும். Omicron வேகமாக பரவி வருவதாலும், சர்வதேச பயணம் அதிகரித்துள்ளதாலும், கனேடியர்கள் கனடாவுக்குள் நுழைவதற்கு முன் செய்யவேண்டிய கொரோனா பரிசோதனைக்கு முன்பதிவு செய்வதிலோ, அல்லது பரிசோதனை முடிவுகளை சரியான நேரத்தில் பெறுவதிலோ பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம்.
கொரோனாவிலிருந்து விடுபட்டதை நிரூபிப்பதில் பிரச்சினை ஏற்படலாம்.
சமீபத்தில் கொரோனாவிலிருந்து விடுபட்டவர்கள் கனடாவுக்குள் நுழைவதற்கு முன் செய்யவேண்டிய கொரோனா பரிசோதனையை செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அவர்கள் தாங்கள் கொரோனாவிலிருந்து விடுபட்டதை நிரூபிக்கவேண்டும். அதாவது கனடாவுக்கு திரும்புவதற்கு 10 முதல் 180 நட்களுக்கு முன் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இருந்தது என்பதைக் காட்டும் ஆவணத்தை அவர்கள் காட்டவேண்டியிருக்கும்.
அப்படி அவர்களால் நிரூபிக்க முடியாத நிலையில், அவர்கள் கனடாவுக்குள் நுழைவதற்கு முன் செய்யவேண்டிய கொரோனா பரிசோதனைக்கு உட்பட்டுத்தான் ஆகவேண்டும். அப்படி பரிசோதனை செய்யும்போது கொரோனா இருப்பதாக பரிசோதனையில் காட்டினால் அதுவும் பிரச்சினையை ஏற்படுத்தும்.
கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இருப்பதாக பரிசோதனை முடிவுகள் காட்டினால், அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியிருப்பதுடன், மீண்டும் 10 நாட்களுக்குப் பிறகுதான் கனடா புறப்பட முடியும்.
தனிமைப்படுத்தலுக்கு உட்படும் சூழல் ஏற்படலாம்
முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்ற பயணிகள் கனடாவுக்குள் நுழையும்போது 14 நாட்கள் தனிமைப்படுத்தலை தவிர்க்கலாம். ஆனால், முழுமையாக தனிமைப்படுத்தலை தவிர்க்க இயலாத சூழல் ஏற்படலாம்.
அதாவது, கனடாவுக்குள் நுழையும் ஆயிரக்கணக்கான பயணிகளை randomஆக தெரிந்தெடுத்து அவர்களை பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தி வருகிறது பெடரல் அரசு. அப்படி பரிசோதனைக்குட்படுத்தப்பட தேர்ந்தெடுக்கப்படுவோர், தங்கள் பரிசோதனை முடிவுகள் வரும்வரை தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கும்.
சிலர், ஆறு நாட்களும், அதற்கு மேலும்கூட பரிசோதனை முடிவுக்காக காத்திருக்க நேர்ந்ததாக தெரிவித்துள்ளார்கள்.
அதாவது, முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள் கூட மீண்டும் கொரோனா தொற்றுக்கு ஆளாகலாம் என்பதால் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆகவே, பயணம் செல்லத் திட்டமிடுவோர் இந்த விடயங்களை மனதில் வைத்துக்கொண்டால், கனடாவுக்கு திரும்பும்போது இப்படிப்பட்ட சூழல் ஏற்படலாம் என்பதால், அதற்கு தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டால், தேவையில்லாமல் மன அழுத்தத்திற்குள்ளாவதை தவிர்க்கலாம்.