அக்டோபர் விடுமுறையில் பிரான்ஸ் செல்ல திட்டமா?: உங்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி
அக்டோபர் விடுமுறைக்கு, பிரான்சுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுவோருக்கு எச்சரிக்கை செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ஆகத்து மாதம் முதல், உணவகங்களுக்குச் செல்வது, சுற்றுலாத்தலங்களுக்கு செல்வது, நீண்ட தூர ரயில் பயணங்களை மேற்கொள்வது முதலான பல அன்றாட விடயங்களுக்கு கொரோனா சுகாதார பாஸ்போர்ட் அவசியம் என பிரான்ஸ் அறிவித்துள்ளது.
அந்த பாஸ்போர்ட், முழுமையாக தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரம், கடந்த 72 மணி நேரத்திற்குள் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரம் அல்லது சமீபத்தில் கொரோனாவிலிருந்து விடுபட்டதற்கான ஆதாரம் ஆகிய இவற்றில் ஒன்றிற்கான ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது
இந்த விதியிலிருந்து 18 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த விதிவிலக்கு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது.
ஆகவே, செப்டம்பர் 30இலிருந்து, 12 வயதுக்கு மேற்பட்ட யாரானாலும், குறிப்பிட்ட இடங்களை அணுகுவதற்கு தங்கள் சுகாதார பாஸ்போர்ட்டைக் காட்டவேண்டியிருக்கும். அதாவது, ஒரு குடும்பம் இரவு உணவுக்காக வெளியே செல்லும்போது சுகாதார பாஸ்போர்ட்டைக் காட்டினால் மட்டுமே பிள்ளைகளும் உணவகங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் (12 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு இந்த விதியால் பாதிப்பு எதுவும் இல்லை).
ஆக, அக்டோபரில் மக்கள் விடுமுறைக்காக பிரான்சுக்கு சுற்றுலா செல்லும் வழக்கம் உண்டு என்பதால், இந்த விடயம் குறித்து அறியாமல் தங்கள் பிள்ளைகளுடன் சுற்றுலா வரும் பயணிகள் சிக்கலுக்குள்ளாக நேரிடலாம்.
இதை தவிர்க்கவேண்டுமானால், ஒன்றில் ஒவ்வொரு 72 மணி நேரத்துக்கு ஒரு முறையும்கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம் (கொரோனா பரிசோதனை பிரான்சில் இலவசம் அல்ல), அல்லது கொரோனா பாஸ்போர்ட் தேவைப்படும் இடங்களை தவிர்க்கலாம் (ஆனால், உணவகங்கள் முதல் சுற்றுலாத்தலங்கள் வரை பெரும்பாலான இடங்களுக்கு கொரோனா பாஸ்போர்ட் அவசியம் என்பதால் இது சாத்தியமா, தெரியவில்லை).
இந்த கொரோனா பாஸ்போர்ட் திட்டம் நவம்பர் 15 வரை அமுலில் இருக்கும், அது நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
ஆகவே, பிரான்சுக்கு அக்டோபரில் சுற்றுலா செல்ல திட்டமிடுவோர் சிறுவர்களுக்கான இந்த கொரோனா பாஸ்போர்ட் திட்டம் குறித்து அறிந்து வைத்துக்கொண்டு, அதற்கேற்ப திட்டமிடுவது நலம் பயக்கும்.