சுவிட்சர்லாந்துக்கு செல்வோர் தங்களுடன் கொண்டு செல்லவேண்டிய ஆவணங்கள் எவை?
சுவிட்சர்லாந்து மீண்டும் சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்வோர் தங்களுடன் கொண்டு செல்லவேண்டிய ஆவணங்கள் எவை என்பது குறித்த சமீபத்தைய தகவல்கள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா துவங்குவதற்கு முன், கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன், சுற்றுலாப்பயணிகள் சுவிட்சர்லாந்துக்குள் நுழைவது எளிதானதாக இருந்தது.
அப்போதெல்லாம், பெரும்பாலும் ஒரு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மட்டுமே சுவிட்சர்லாந்துக்குள் நுழைவதற்கு போதுமானதாக இருந்தது.
ஆனால், இப்போது தடுப்பூசி பெற்றுக்கொண்டதற்கான அல்லது கொரோனாவிலிருந்து விடுபட்டதற்கான ஆதாரம், அல்லது, கொரோனா பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்பதைக் காட்டும் பரிசோதனை முடிவுகள் முதலான கூடுதல் ஆவணங்கள் தேவைப்படுகின்றன.
ஜூன் மாத இறுதியில் சுவிட்சர்லாந்துக்குள் நுழைவதற்கான விதிமுறைகள் மாற்றப்பட்டன. அதற்கு முன், ஷெங்கன் பகுதியைச் சேர்ந்தவர்களும், அப்பகுதிக்கு வெளியில் உள்ளவர்களும் வெவ்வேறு வகையில் நடத்தப்பட்டார்கள்.
ஜூன் 26 முதல், திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் குறித்த கவலை காரணமாக, எந்தெந்த நாடுகளில் அவ்வகை வைரஸ் பரவுகிறது என்பதன் அடிப்படையில் நாடுகளை வகைப்படுத்தத் துவங்கியது சுவிட்சர்லாந்து.
ஷெங்கன் மண்டலம் மற்றும் EFTA நாடுகளிலிருந்து வருவோருக்கான விதிமுறைகள்
ஷெங்கன் மண்டலம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அல்லது சிறிய ஐரோப்பிய நாடுகளான அண்டோரா Andorra), வாட்டிகன், மொனாக்கோ மற்றும் சாம் மாரியோ ஆகிய நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகள், ஒன்றில் கொரோனா தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும், அல்லது சமீபத்தில் கொரோனாவிலிருந்து விடுபட்டிருக்கவேண்டும், அல்லது கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்னும் பரிசோதனை முடிவுகளைக் காட்டினால்தான் சுவிட்சர்லாந்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
அத்துடன், நுழைவுப் படிவம் ஒன்றையும் நீங்கள் பூர்த்தி செய்யவேண்டியிருக்கும்.
ஐரோப்பிய ஒன்றியம், ஷெங்கன் மண்டலம், மற்றும், ஐஸ்லாந்து, Liechtenstein மற்றும் நார்வே என்னும் EFTA நாடுகளிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வருவோருக்கான விதிமுறைகள்
ஜூன் 26 அன்று, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே இருந்து வருவோருக்கான விதிகளை சுவிட்சர்லாந்து நெகிழ்த்தியது.
அதன்படி, ஷெங்கன் பகுதியை சேராத நாடுகளிலிருந்து வருபவர்கள், கடந்த 12 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி பெற்றிருந்தாலோ, அல்லது கடந்த ஆறு மாதங்களுக்குள் கொரோனாவிலிருந்து விடுபட்டவர்களாகவோ இருந்தால், அவர்கள் சுவிட்சர்லாந்துக்குள் நுழையலாம்.
இந்த பட்டியலில், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் திடீர் மாற்றம் பெற்ற கொரோனா அச்சுறுத்தல் இல்லாத பிற ஷெங்கன் மண்டல நாடுகளல்லாத நாடுகள் அடங்கும்.
இம்மண்டலத்துக்கு வெளியிலுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் தடுப்பூசி பெறாதவர்களாகவோ, கொரோனாவிலிருந்து விடுபடாதவர்களாகவோ இருந்தால், அவர்களுக்கு சுவிட்சர்லாந்துக்குள் அனுமதி கிடையாது.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
நீங்கள் விமானம் ஏறும் முன், மின்னணு நுழைவுப் படிவம் ஒன்று பூர்த்தி செய்யப்பட்டிருக்கவேண்டும். அதை பூர்த்தி செய்து அனுப்பினால், உங்களுக்கு QR குறியீடு ஒன்று வழங்கப்படும்.
இந்தக் குறியீட்டை நீங்கள் அனைத்து விமான நிலையங்களிலும், சுவிட்சர்லாந்து விமான நிலையத்திற்குள் நுழையும்போதும் காட்டவேண்டியிருக்கும்.
அத்துடன், நீங்கள் பெற்ற தடுப்பூசி, ஐரோப்பிய ஒன்றியம், சுவிஸ் சுகாதார அமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தடுப்பூசியாக இருக்கவேண்டும். தற்போது, மொடெர்னா, பைசர், ஆஸ்ட்ராசெனகா, ஜான்சன் அண்ட் ஜான்சன் மற்றும் சினோஃபார்ம் மற்றும் சினோவாக் என்னும் சீனத் தடுப்பூசிகள், கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்த விதிகள் தற்போது நடைமுறையில் உள்ளன. சுவிட்சர்லாந்தில் கொரோனா நிலைமை மாறுமானால், இந்த விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்படும்.
இந்த விதிமுறைகள், கடைசியாக இம்மாதம் (நவம்பர்) 9 அன்று மாற்றம் செய்யப்பட்டன என்பதை கவனத்தில் கொள்ளவும்.