கனடா செல்லும் திட்டம் உள்ளதா உங்களுக்கு... உங்களுக்காக ஒரு முக்கிய தகவல்
அத்தியாவசிய காரணங்களுக்காக கனடா செல்லும் பயணிகள் கூட, எல்லையைத் தாண்டும் முன் முழுமையாக தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும் என்றும், தடுப்பூசி பெறாத கனேடியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக கனடா செல்லும் பயணிகள் முழுமையாக தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும் என்ற விதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், ஜனவரி 15 முதல், அத்தியாவசிய காரணங்களுக்காக கனடா செல்லும் பயணிகள் கூட, எல்லையைத் தாண்டும் முன் முழுமையாக தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும் என்று புதிதாக ஒரு விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் இந்த புதிய விதிமுறை?
- கனேடியர்களின் குடும்ப உறுப்பினர்கள், நிரந்தர வாழிட உரிமம் பெற்றவர்கள் மற்றும் இந்திய சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள்.
- 18 வயதும் அதற்கு அதிகமான வயதும் உடைய சர்வதேச மாணவர்கள்.
- விளையாட்டு வீரர்கள்.
- விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்தும் துறை தவிர்த்து, பணி அனுமதி வைத்துள்ள பிற பணியாளர்கள்.
- ட்ரக் சாரதிகள் முதலான அத்தியாவசிய சேவை வழங்குவோர்.
கனேடிய குடிமக்களையும் நிரந்தர வாழிட உரிமம் பெற்றவர்களையும் கனடாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கமுடியாது. ஆனாலும், தடுப்பூசி பெறாத கனேடியர்கள் பயணத்துக்கு முந்தைய, கனடாவுக்குள் நுழைந்தவுடன் மற்றும் கனடா வந்த எட்டாவது நாள் கொரோனா பரிசோதனைகளை செய்துகொள்ளவேண்டும் என்பதுடன் தனிமைப்படுத்தலுக்கும் உட்படவேண்டும்.
தடுப்பூசி பெறாத மற்றும் ஒரு டோஸ் தடுப்பூசி மட்டும் பெற்ற வெளிநாட்டவர்களில் சிலருக்கு மட்டும் கனடாவுக்குள் நுழைவதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்தும் பணியாளர்கள், கடற்படை சார்ந்த பணியாளர்கள், கருணை அடிப்படையில் கனடா வருவோர், புதிய நிரந்தர வாழிட உரிம பெற்றவர்கள், மறுகுடியமரும் அகதிகள் மற்றும் சில 18 வயதுக்குக் குறைந்த சிறுவர்கள் சிலர் ஆகியோர் இந்த விதிவிலக்கு பெற்றவர்களில் அடங்குவர்.
ஆனாலும், முழுமையாக தடுப்பூசி பெறுவதிலிருந்து விதிவிலக்கு பெற்றவர்களும் கொரோனா பரிசோதனைகள், தனிமைப்படுத்தல் மற்றும் பிற நுழைவுக் கட்டுப்பாடுகளுக்கு உட்படவேண்டியிருக்கும்.
தடுப்பூசி பெறாத, மற்றும் விதிவிலக்கும் பெறாத வெளிநாட்டவர்களுக்கு கனடாவுக்குள் நுழைய அனுமதி இல்லை!
கொரோனா அறிகுறி உடைய பயணிகள், கனடாவுக்குள் நுழைந்ததும் பொது சுகாதார அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அறிகுறிகள் தோன்றிய நாளிலிருந்து 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவார்கள்.
பயணிகளில் யார் கனடாவுக்குள் அனுமதிக்கப்படுவது, கனடாவுக்குள் நுழைவோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படவேண்டுமா என்பது போன்ற விடயங்களை எல்லை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.
கனடா அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளாவன:
- ஆஸ்ட்ராசெனகா/கோவிஷீல்டு (ChAdOx1-S, Vaxzevria, AZD1222)
- பாரத் பயோடெக் (Covaxin, BBV152 A, B, C)
- ஜான்சன் அண்ட் ஜான்சன்
- மொடெர்னா (mRNA-1273)
- பைசர் -BioNTech (Comirnaty, tozinameran, BNT162b2)
- Sinopharm BIBP (BBIBP-CorV)
- Sinovac (CoronaVac, PiCoVacc)