மன்னர் சார்லசுக்கு சிகிச்சை துவக்கம்: பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கமாட்டார் என அறிவிப்பு
பிரித்தானிய மன்னர் சார்லசுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவருக்கு நேற்றே வழக்கமான சிகிச்சைகள் துவக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மன்னர் சார்லசுக்கு புற்றுநோய்
சமீபத்தில், மன்னர் சார்லசுக்கு புரோஸ்ட்ரேட் சுரப்பியில் வீக்கம் இருப்பது தெரியவந்ததையடுத்து அவர் அதற்காக சிகிச்சை பெற்றார். அவர் புரோஸ்ட்ரேட் பிரச்சினைக்கான சிகிச்சையில் இருக்கும்போது, அவருக்கு வேறு ஒரு பிரச்சினை இருப்பது தெரியவந்துள்ளது.
GETTY IMAGES
அது என்ன என மருத்துவர்கள் பரிசோதிக்கும்போது, அது ஒருவகை புற்றுநோய் என தெரியவந்துள்ளது. அது என்ன வகை புற்றுநோய் என தெரிவிக்கப்படாத நிலையில், அது, புரோஸ்ட்ரேட் தொடர்பான புற்றுநோய் அல்ல என்று மட்டும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கமாட்டார்
நேற்று மன்னருக்கு வழக்கமான சிகிச்சைகள் துவக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தற்காலிகமாக நிறுத்திவைக்க உள்ளார் என்றும், ஆனாலும், ஒரு மன்னராக தான் செய்யவேண்டிய ஆவணங்கள் தொடர்பான பணிகள் மற்றும் தனிப்பட்ட வகையிலான சந்திப்புகளைத் தொடர்வார் என்றும் அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
மேலும், மன்னர் அதிகமாக யாரையும் சந்திக்கக்கூடாது என மருத்துவர்கள் ஆலோசனையளித்தாலன்றி, வாரம் ஒரு முறை பிரித்தானிய பிரதமரை சந்திக்கும் அவரது பணி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |