இந்தியாவில் ஏற்பட்ட புயலில் மின்னல் தாக்கி எரியும் மரம்?: வைரல் வீடியோவின் பின்னணியில் உள்ள உண்மை
சமீபத்தில் இந்தியாவை அசானி புயல் தாக்கிய நிலையில், வீடு ஒன்றின் அருகே நின்ற மரம் ஒன்று மின்னல் தாக்கி எரியும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலானது.
இந்த சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்ததாக பல சமூக ஊடகப் பயனர்கள் தெரிவித்திருந்தார்கள்.
ஆனால், அது உண்மை இல்லை என தற்போது தெரியவந்துள்ளது.
அந்த வீடியோ ஐந்து ஆண்டுகளுக்கு முன் கனடாவில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியான அந்த வைரல் வீடியோவுக்கு பதிலளித்திருந்த ஒருவர், அந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது அல்ல என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா டுடே பத்திரிகையின் உண்மை அறியும் குழு மேற்கொண்ட ஆய்வில், அந்த வீடியோ 2017ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி, பேஸ்புக் இடுகை ஒன்றில் வெளியான வீடியோ என்பது தெரியவந்தது.
அந்த வீடியோவில், அசாதாரண மின்னல் தாக்கு, கனடாவில் உள்ள ஒரு இடம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில், 2017ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி, ‘The Daily Mail’ பத்திரிகை வெளியிட்டிருந்த ஒரு செய்தியில், இந்த சம்பவம் கனடாவிலுள்ள வேட்டையாடுபவர்கள் பயன்படுத்தும் ஒரு லாட்ஜின் அருகில் நடந்தது தெரியவர, அந்த லாட்ஜ் உரிமையாளர்களும் அந்த விடயம் கனடாவில் நிகழ்ந்ததுதான் என்பதை உறுதி செய்துள்ளார்கள்.
அந்த வீடியோவை பதிவு செய்தவர் கனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த Oliver Dorion என்பவர். அவர் Mansfield-et-Pontefract என்ற இடத்தில் அமைந்துள்ள Bryson Lake Lodge என்ற லாட்ஜில் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.
ஆக, அந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது அல்ல என்பது உறுதியாகியுள்ளது.